அடிப்படை வசதி கிடைக்காவிட்டால் ரேஷன் கார்டை திரும்ப ஒப்படைப்போம்

கரூர், செப். 18: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கோரிக்கை சம்பந்தமான மனுக்களை வழங்கினர்.

இதில், கரூர் மாவட்டம் நெரூர் தென்பாக ஊராட்சியை சேர்ந்த எம்ஜிஆர் நகர், பெறமாயி அம்மன் கோயில் தெரு மற்றும் ஆர்சி தெரு பகுதியினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் தெருவுக்கு தேவையான குடிதண்ணீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்கவில்லை. திண்டுக்கல்லுக்கு செல்லும் காவிரி நீர் ஏர்வால்வு பைப்பில்தான் தண்ணீர் கொண்டு வந்து, சமைக்க பயன்படுத்தி வருகிறோம். தெரு விளக்கு சரியாக எரியாததால் இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர்களிடம் தெரிவித்தும் குறைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை. மேலும், டேங்க் ஆப்ரேட்டர்கள் குடிதண்ணீர் இல்லாமல், நெரூர் வடபாகம் பகுதிக்கான நபரை வைத்து பயன்படுத்துகின்றனர். இப்பகுதியில் இரண்டு சின்டெக்ஸ் டேங்க் இருந்தும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால், எங்கள் தெருவின் அருகில் உள்ள என்எஸ்கே நகரில் அனைத்து வசதிகளும் அலுவலகம் மூலம் செய்து தரப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிடைக்காத பட்சத்தில், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அரசிடம் திரும்ப ஒப்படைத்து விடவும் முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டம் நெரூர் தென்பாகம் என்.புதுப்பாளையம் பகுதி மக்கள் வழங்கிய மனுவில், எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் டேங்கின் மோட்டார் நீண்ட காலமாக காணவில்லை. மேலும், ஏற்கனவே, இருந்த பழைய அடிபைப்புகளின் இரும்பு குழாய்களும் காணவில்லை. சுத்தமாக தெருவிளக்கு வசதியே இல்லை. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து பார்வையிட்டு தேவையான உதவிகளை செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: