செங்கல் சூளைக்கு விறகாக செல்லும் தென்னை பொருட்கள்

பரமக்குடி, செப்.18:  விலைவாசி உயர்வு காரணமாக தும்பு மில்கள் அடைக்கப்பட்டு வருவதால், கிராம பகுதிகளில் உள்ள தோப்பு உரிமையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். தோப்புகளில் இருந்து கிடைக்கும் கச்சா பொருட்கள் செங்கல் சூளைகளில் அடுப்பு எரிக்க பயன்படுத்தப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அதிக தென்னை, பனைமர தோப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து கிடைக்கும் தேங்காய், இளநீர் காய்கள், தென்னை, பனை ஓலைகள், நொங்கு, பனங்கிழங்கு ஆகியவற்றிற்காக தென்னை மற்றும் பனைமர தோப்புகள் இப்பகுதியில் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தும்பு மில்களுக்கு அப்பகுதியை சேர்ந்த தோப்பு உரிமையாளர்கள் மூலம் கச்சா பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வந்தது. தற்போது தும்பு மில்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நார் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் பல தும்பு மில்கள் அடைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தும்பு மில்களுக்கு பயன்படும் கச்சா பொருட்கள் பரமக்குடி, மானாமதுரை சுற்றி கிராம பகுதிகளில் உள்ள செங்கல் சூளை மற்றும் அடுப்பு எரிக்க லாரிகள் மூலமாக ஏற்றி செல்லப்படுகிறது. இதற்காக பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில் ஏராளமான தேங்காய் ஓடுகள் காயவைக்கப்பட்டுள்ளன. வியாபாரிகள் கூறுகையில், விலைவாசி ஏற்றத்தால் 400 முதல் 500 ரூபாய் வரை விற்று வந்த இந்த தேங்காய் ஓடுகள் தற்போது 200 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் தோப்பிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு கச்சா பொருட்களின் விலையும் குறைந்து வருகிறது. பிற மாவட்டங்களில் உள்ள தும்பு மில்கள் பல அடைக்கப்பட்டு வருவதால், தோப்பு உரிமையாளர்கள் வேறு வழியில்லாமல் எங்களிடம் இதை மொத்த விலைக்கு விற்கின்றனர். நாங்கள் இதை பிற இடங்களுக்கு லாரிகள் மூலமாக  ஏற்றிச் சென்று குறைந்த லாபத்துடன் விற்பனை செய்கிறோம். மாவட்டத்தில் கருவேல மரங்கள் அதிகம் உள்ள நிலையில் தற்போது செங்கல் சூளைகளுக்கு கருவேல மரங்களின் விறகுகளையும் விற்பனை செய்கிறோம் என்று கூறினர்.

Related Stories: