பள்ளி நிதி ஒதுக்கீட்டில் கம்ப்யூட்டர் வாங்க வேண்டும் : சிஇஓ அறிவுறுத்தல்

சிவகங்கை, செப். 18: மாவட்டத்தில் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபரகரணங்கள் வாங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம். 2018-2019ம் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் (சமக்ர சிக்ஷா அபியான்) சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 775 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மானியமாக ரூ.2 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை அனைத்து ஒன்றியங்களுக்கும் வழங்கப்படுகிறது. இதற்கான மாவட்ட அளவிலான கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் (பொ) முருகன் தலைமையில் நடந்தது. உதவித்திட்ட அலுவலர் பாஸ்கர், மாவட்ட ஒருங்கினைப்பாளர் சகாயபிரிட்டோ மற்றும் அனைத்து வட்டார வளமைய மானிய ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பள்ளி மானியத்தை பயன்படுத்தி கம்ப்யூட்டர், எல்சிடி ப்ரொஜெக்டர், டிவி, டிவிடி, பொருட்கள் வாங்கவும், பழுதுநீக்கம் செய்யவும், இணையதள வசதி செய்யவும் பயன்படுத்த வேண்டும். பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலி, பீரோ, குடிநீர் பாத்திரம், பதிவேடுகள், எழுதுபொருட்கள், மின்விசிறி, மின் விளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசியமான பல்வேறு பொருட்கள் வாங்கவும் பயன்படுத்த வேண்டும். கழிப்பறைகள், குடிநீர் வசதியை உறுதி செய்ய வேண்டும். கழிவறை பயன்பாட்டில் இருக்கும் வகையில் உட்புறம் பேசின் பொருத்துதல், கதவு மற்றும் வெண்டிலேட்டர், தண்ணீர் வசதி, தரை ஒடுகள், டேங்க் பழுதுபார்த்தல் முதலிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைகளில் கட்டாயம் கை கழுவ வசதியாக குழாய் அமைத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: