கிராம பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள்பயணிகள் வலியுறுத்தல்

பரமக்குடி, செப்.18:  பரமக்குடியில் இருந்து சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமக்குடியில் இருந்து நயினார்கோயில் வழியாக ராமநாதபுரத்திற்கும், முதுகுளத்தூர், சாயல்குடி, திருவரங்கம் உள்பட சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கும் அரசு நகர் பஸ்கள், தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் நெரிசல் மிகுதியாக உள்ளது. இதனால் பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்ள நேரிடுகிறது. இளைஞர்கள், மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும், பஸ்களின் கூரைகள் மீது ஏறியும் பயணிக்கின்றனர். சில பஸ்கள் பளு தாங்காமல் சாய்ந்து விழும் நிலையில் செல்கின்றன. இதனால் விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி நேரிடும் அபாயம் உள்ளது. நெரிசலை பயன்படுத்தி பஸ்ஸிற்குள் பிக்பாக்கெட் மற்றும் திருட்டு சம்பவங்களும் நடைபெறுவதால் பயணிகள் பொருட்களை இழந்து பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். இதனை தவிர்க்கும் பொருட்டு சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர் சேகரன் கூறுகையில், ‘கிராமங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களிலுமே நெரிசல் அதிகம் உள்ளது. கூட்ட நெரிசலால் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் சிக்கி தவிக்கின்றனர். உடமைகளை தவற விடவும் நேரிடுகிறது. பயணிகளின் நலன் கருதி, கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முன்வர வேண்டும்’ என்றார்.

Related Stories: