பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீரை திறந்து விடவேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், செப்.18:  ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீரை திறந்துவிட்டு நீராதாரத்தை மேம்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய கண்மாய் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் ஆகும். கண்மாய் சுமார் 20 கி.மீ நீளமுள்ளதோடு, 1205 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டவை. இந்த கண்மாயில் பாசனத்திற்காக 1 கி.மீ தூரத்திற்கு ஒரு மடை வீதம் அமையப்பட்டுள்ளது. இக்கண்மாய் நிறைந்தால் இதன் உபரி நீர் அருகேயுள்ள 72 சிறு கண்மாய்களும் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக மழை பொய்த்து போனதால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் பூமிக்கு அடியில் ஏராளமான தூரத்திற்கு சென்று விட்டது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே வைகையில் இருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு செல்லும் வழியில் அரசடி வண்டல் பாண்டியூர் பகுதியில் உள்ள கீழ நாட்டார் கால்வாய் வழியாக அந்த தண்ணீரை திறந்து விட்டால் ஆர்.எஸ்.மங்கலம் மட்டுமின்றிஏராளமான கிராமங்களில் உள்ள நீர் நிலைகளில் நீராதாரம் கூடும். இதனால் ஒரளவு குடிதண்ணீர் பிரச்னையை போக்கலாம். ஆர்.எஸ்.மங்கலம் யூனியனுக்கு உட்பட்ட ஏராளமான கிராமங்களில் குடி தண்ணீர் பிரச்னை தீரவில்லை. தினமும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் ரூ.100 முதல் 250 வரை தண்ணீருக்கே செலவு செய்யும் அவல நிலை தொடர்கிறது. இந்நிலை மாற வைகை தண்ணீரை ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு கொண்டு வர கலெக்டர் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: