3 வருடங்களாக தீராத குடிநீர் பிரச்சனை : ரேஷன் கார்டுகளை திரும்ப ஒப்படைப்போம்

உசிலம்பட்டி, செப்.18: எழுமலை அருகே 3 வருடமாக குடிநீர் பிரச்சனையை தீர்க்காத அதிகாரிகளை கண்டித்து ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கப்போவதாக கிராமமக்கள் அறிவித்துள்ளனர். பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியம், சூலப்புரம் ஊராட்சிக்கு உட்பட்டது குன்னுவார்பட்டி கிராமம். இங்குள்ள மக்களின் வசதிக்காக 2 போர்வெல் போடப்பட்டது. ஒரு இடத்தில் ஆழம் குறைவாக போட்டுவிட்டனர். இங்கு நிலத்தடிநீர்மட்டம் குறைந்துவிட்டதால் தண்ணீர் கிடைக்காமல் போர்வெல் வீணாக கிடக்கிறது. மற்றொரு இடத்தில் நன்றாக இயங்கிக்கொண்டிருந்த போர்வெல்லில், மோட்டார் பழுது எனக்கூறி அனைத்தையும் ஊராட்சி நிர்வாகம் எடுத்து சென்றுவிட்டது. இதனால் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டது. தற்போது இந்த கிராமத்திற்கு வைகை ஆண்டிபட்டி-கூட்டிகுடிநீர் திட்டம் மூலம் 10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் திறந்து விடப்படுகிறது. அதுவும் சொட்டு சொட்டாக வருகிறது. குழாயில் நீண்டநேரம் காத்திருந்து பிடிக்க வேண்டியுள்ளது. மேலும் குடிநீரில் புழுக்கள், அரைத்தவளை போன்றவை கலந்து வருகின்றன.

இதை குடிக்கும் மக்களுக்கு நோய் பரவி வருகிறது. கிராமத்தை சேர்ந்த வருதம்மாள் என்ற பெண்ணும்,  தங்கத்தமிழ்செல்வன்(3) என்ற சிறுவனும் நோய்வாய்ப்பட்டு கடந்த ஒரு வாரமாக வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடிநீர் பிரச்சனையை தீர்க்ககோரி கடந்த சில மாதங்களுக்கு முன் சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். அதன்பின்னர் ஆணையாளர் போர்வெல் மூலம் மீண்டும் ஆழ்துளை கிணறு அமைக்க உத்தரவிட்டார். அதன்படி போர் போட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை தண்ணீர் கிடைத்தபாடில்லை.   

இது குறித்து குன்னுவார்பட்டி ஜெயராஜ் கூறும்போது, ‘‘சேடபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் கேட்டால், உங்களுக்கு போர்வெல் போட்டாச்சு; தண்ணீர் இருந்தாலும், இல்லையென்றாலும் இனிமேல் போர்வெல் போடமாட்டோம். நீங்க வேணுமுன்னா ஊரைவிட்டு போங்க என்கிறார். அதிகாரியே இப்படி சொல்லும் போது, நாங்கள் ரேஷன்கார்டை கலெக்டரிடம் ஒப்படைத்து விட்டு ஊரைக்காலி செய்துதான் போகப்போகிறோம்’’ என்றார்.

சுப்பம்மாள் கூறும்போது, ‘‘ஊருக்குள் தண்ணீரில்லாததால் அருகிலுள்ள தோட்டங்களில் எப்போதாவது தண்ணீர் பிடிப்போம். அங்கும் விரட்டி விடுகின்றனர். உடம்பில் பலம் உள்ளவர்கள் அருகிலுள்ள உலைப்பட்டியில் சைக்கிள், டூவீலரில் தண்ணீர் கொண்டுவந்து விடுகின்றனர். என்னைப்போல் வயதானவர்கள் எப்படி தண்ணீர் கொண்டுவருவது’’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.

முதலில் கமிஷன்

பிறகுதான் வேலை

செல்லத்துரை கூறும்போது,  ‘‘குடிநீருக்காக அதிகாரிகளிடம் பலமுறை போராடிவிட்டோம். போர்வெல் போட்ட  இடத்திலிருந்து பைப் கொண்டு வருவதற்கு தரம் குறைந்த பைப்புதான் போட  முடியும்; எனக்கு கொடுத்த மதிப்பீட்டில் கமிஷன் கொடுத்தது போகத்தான் வேலை  செய்ய முடியும் என்கிறார் ஒப்பந்தகாரர். இது சம்மந்தமாக அதிகாரிகளிடம்  கூறினால் பேச மறுக்கின்றனர்’’ என்றார்.

தண்ணீர் கிடைக்காமல்

கால்நடைகள் சாவு

சீனியம்மாள் கூறும்போது, ‘‘குடிக்க தண்ணீரில்லாமல் மனிதர்கள் நாங்களே திண்டாடும்போது, கால்நடைகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அய்யாத்துரை என்பவர் வீட்டில் பால்மாடு, மகாராஜன் வீட்டில் கன்றுகுட்டி ஆகியவை இறந்து போனது. குடிக்கவே தண்ணீரில்லை. பள்ளிக்கு செல்லும் எனது பேரன், பேத்திகளை குளிக்க வைக்ககூட முடியாமல் திண்டாடுகிறோம். இந்த அதிகாரிகள் ஏன்தான் இப்படி செய்கிறாங்களோ தெரியல. ஊரைக்காலி செய்துதான் வாழ வேண்டுமா?’’ என்று சோகத்துடன் தெரிவித்தார்.

Related Stories: