கம்பைநல்லூர் செல்லியம்மன் கோயில் திருவிழா

அரூர், செப்.18: கம்பைநல்லூரில் 5 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் செல்லியம்மன் ேகாயில் திருவிழா ஒரு மாதம் நடைபெற்றது. இந்த விழாவில் ஓலைப்பட்டி, பூமிசமுத்திரம், கம்பைநல்லூர் பகுதிகளை சேர்ந்த 21 சமூகத்தை சார்ந்த மக்கள் கலந்து கொண்டனர். பட்டாளத்து அமமன், கங்கையம்மன், செல்லியம்மன், கோட்டை மாரியம்மன், காளியம்மன், அரசமரத்து மாரியம்மன், திரௌபதியம்மன் ஆகிய 7 தேவதைகளுக்கு 29 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  கரகம், மாவிளக்கு எடுத்தல், சக்தி பூஜை, பூமிதி விழா உள்ளிட்டவை கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆண்கரகம், பெண்கரகம் கைகூடும் விழா நேற்று நடைபெற்றது. மாரியம்மன் கோயிலில் இருந்து ஆண்கரகமும், செல்லியம்மன் கோயிலில் இருந்து பெண்கரகமும் புறப்பட்டு மாவிளக்கு தட்டுடன் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தது. அங்குள்ள மைதானத்தில் இரண்டு கரகமும் தலை கூடும் விழா நடைபெற்றது.  5 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கரகம் கூடும் நிகழ்ச்சியை காண மக்கள் திரளாக வந்திருந்தனர். பின்னர் செல்லியம்மன் கோயில் முன் 75க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.  இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா முடிவடைகிறது.

Related Stories: