புள்ளலூர் கிராம பிள்ளையார் கோயிலில்புதையல் எடுக்க பள்ளம் தோண்டப்பட்டதா?

வாலாஜாபாத், செப். 18: புள்ளலூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் பராமரிப்பு பணி என்ற பெயரில் பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டிய நபர்கள் சில நாட்களாக காணவில்லை. தோண்டப்பட்ட பள்ளம் புதையல் எடுக்கவா என்ற சந்தேகத்தின் பேரில் அக்கிராம மக்கள் காவல் துறையில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியத்தில் புள்ளலூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த கோயில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்தப் பிள்ளையார் கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் புதர் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது.  இந்த கோயிலின் கோபுரங்கள் செடிகொடிகள் மூடியவாறு காணப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த ஒரு சில தினங்களாக இந்த கோயிலில் பராமரிப்பு பணி செய்வதாக கூறி சில நபர்கள்  கோயிலைச் சுற்றியும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த பராமரிப்பு பணியை அக்கிராம மக்களில் ஒரு சிலர் பார்வையிடுவதற்காக சென்றனர்.

அப்போது அந்த கோயிலின் மைய பகுதியில் சுமார் 15 அடி ஆழம் கொண்ட பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் எதற்காக இவ்வளவு பெரிய பள்ளம் தோண்டி உள்ளனர் என்று பார்த்தனர்.  தோண்டப்பட்ட இந்த பள்ளத்தின் பயன்பாடுகள் என்ன என்பது குறித்து அறிய முடியாமல் திகைத்து நின்றனர். மேலும்  தோண்டப்பட்ட இந்தபள்ளம் குறித்து கிராம மக்களிடையே தகவல் பரவியது. இத்தகவலையடுத்து சாரை, சாரையாக கிராம மக்கள் இந்த கோயிலைப் பார்க்க வந்தனர்.  இவ்வளவு பெரிய பள்ளம் தோண்டியதற்கு என்ன காரணம்?  இந்த பராமரிப்பு பணியை செய்தவர்கள் யார் என்பது குறித்து தெரியாமல் திகைத்து நின்ற

னர். இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக வந்த மர்ம நபர்கள் சில நாட்களாக காணவில்லை. புதையல் இருப்பதாக நினைத்து வந்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக இவ்வளவு பெரிய பள்ளம் தோண்டப்பட்டதா என்பது குறித்து விடை தெரியாமல் கிராம மக்கள் திகைத்து போயினர்.பின்னர் இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளம் தோண்டிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Related Stories: