குடிமைப்பொருட்களை சரியாக வழங்கக்கோரி சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம் முற்றுகை

சங்கரன்கோவில், செப். 18: ரேஷன் கடையில் பில் ஒருநாளும் பொருட்கள் மற்றொரு நாளும் வழங்குவதை நிறுத்த வேண்டும், தரமான பொருட்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே உள்ளது கீழ நரிக்குடி, மேல நரிக்குடி கிராமங்கள். இங்குள்ள சுமார் 500 வீடுகளில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீழ மற்றும் மேலநரிக்குடியில் இரண்டு ரேசன் கடைகள் இயங்கி வருகிறது. இவற்றில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாகவும், சீனி, கோதுமை, பாமாயில் போன்ற அத்தியவாசிய பொருட்கள் முறையாக வழங்காமல் முறைகேடு நடப்பதாக அப்பகுதி மக்கள் உயர் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து சங்கரன்கோவில் திமுக செயலாளர் ராஜதுரை தலைமையில் நகர இளைஞரணி சரவணன், ராமதுரை, தகவல் தொழில்நுட்ப அணி குமார், முன்னாள் கவுன்சிலர்கள் டைட்டஸ், இளங்கோ மற்றும் வார்டு நிர்வாகி சதாசிவம், ஊர் நாட்டண்மை சின்னப்பாண்டி மற்றும் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட தரமற்ற அரிசியுடன் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் சிவில் சப்ளை தாசில்தார் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள் அதிகாரிகளிடம் கூறியதாவது, கடந்த சில மாதங்களாகவே ரேசன் கடையில் தரமற்ற அரிசியே வழங்கப்படுகிறது. ரேசன் கடைகள் வாரத்திற்கு ஒருமுறை கூட சரியாக திறக்கப்படுவதில்லை. சரியான நேரத்திற்கும் திறக்கப்படாததால் கூலி வேலைக்குச் செல்வோர் ரேஷன் பொருட்களை பெற முடியாமலும், பொருட்கள் வாங்கும் நாட்களில் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளதாகவும் கூறினர். மேலும் கடையில் பருப்பு, பாமாயில், சீனி உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை எனவும், கடையில் பில் ஒருநாளும் பொருட்கள் மற்றொரு நாளும் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றனர்.இகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து பொதுமக்கள் கோரிக்கைகள அடங்கிய மனுவை அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: