தலைமை நீதிபதி, உயரதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை

புதுச்சேரி, செப் 18:  ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர்கள் பிறந்தநாளின் போது, நன்னடத்தை என்ற அடிப்படையில் பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது வழக்கம். அதன்படி புதுச்சேரியிலும் இதற்கான ஆலோசனை குழு 14 ஆண்டுகளை நிறைவு செய்த 39 கைதிகளை விடுதலை செய்ய பரிந்துரைத்தது. கடந்த 2012, 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் 39 தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியலமைப்பு விதிகள், குற்றவியல் நடைமுறை, சிறைச்சாலை விதிகள்  படி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனை அனுப்பவிக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படவில்லை.தற்போது புதுச்சேரி சிறையில் 43 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர். இதில் 15 நபர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு 15 ஆயுள்தண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சி அரசை வலியுறுத்தி வருகின்றனர். அரசியலமைப்பு சட்டம் 161 மற்றும்  72வது அரசியலைப்பு சட்டத்தின் கீழ் விடுதலை செய்ய வேண்டுமென அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சட்டசபையில் அரசு  உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி   திடீரென ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் புதுச்சேரி தலைமை நீதிபதி  தனபால், தலைமை செயலர் அஸ்வனிகுமார், டிஜிபி சுந்தரி நந்தா, சிறைத்துறை ஐஜி  பங்கஜ்குமார் ஜா, சட்டத்துறை செயலர் ஜூலியட் புஷ்பா உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.கூட்டத்தில் மகாத்மா காந்தியின் 150ம் ஆண்டு  பிறந்தநாளையொட்டி புதுவை சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள தண்டனை  கைதிகளை நன்னடத்தை விதிகளின்கீழ்  விடுதலை செய்வது, அதற்கான சட்டதிட்ட  நெறிமுறைகள் தொடர்பாக ஆலோசித்ததாக தெரிகிறது. மேலும்  காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் தண்டனை  கைதிகள் விபரம், அவர்களின்  செயல்பாடுகள், தண்டனை காலம் குறித்தும் முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.  அக்.2 விடுதலையாகும் தண்டனை கைதிகள் பெயர் விபரம் ஓரிரு நாளில்  அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: