விவசாய கூலி தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

புதுச்சேரி, செப். 18:  புதுச்சேரி மாநில விவசாய கூலி தொழிலாளர்கள் நல வாரியம் அமைப்பு நலச்சங்க பொதுச்செயலாளர் வீரமுத்து அளித்த பேட்டி: புதுச்சேரி அரசு கட்டிட தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து பல சலுகைகளை வழங்குகிறது. அவர்கள் ஒரு நாள் சம்பளமாக ரூ.700 பெறுகிறார்கள். அதேபோல் மீனவர்கள் படகு வாங்கி தொழில் செய்ய மானியமும், நெசவு தொழிலாளர்களுக்கு நூல் மற்றும் பல உபகரணங்களும் வழங்குகிறது. விவசாயத்துறையின் மூலம் பல லட்சக்கணக்கில் உரம், டிராக்டர், நீர் பம்பு செட் அமைக்க பல லட்சங்களை அளிக்கிறது. ஆனால், காலை 5 மணிக்கு எழுந்து கரும்பு வெட்ட மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்களுக்கு புதுவை அரசு சார்பில் எந்த ஒரு உதவியும் வழங்கப்படுவதில்லை.

 எனவே, புதுவை அரசு உடனடியாக நலவாரியம் அமைத்து முதியோர்களுக்கு ரூ.3 ஆயிரம் பென்ஷனும், மீனவர்களுக்கு 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தில் உதவித்தொகையும் வழங்குவது போல விவசாய தொழிலாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். அனைத்து வேலைகளுக்கும் மெஷின்கள் வந்துவிட்டதால் அடித்தட்டு மக்கள் மிகவும் வறுமையில் வாடுகிறார்கள். பீகார், குஜராத் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலையின்றி தமிழ்நாடு, புதுச்சேரியில் வேலை செய்கிறார்கள். அதுபோல் புதுச்சேரி மக்கள் எங்கும் சென்று வேலை செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே, உடனடியாக நலவாரியம் அமைத்து அடித்தட்டு மக்கள் வாழ உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 அப்போது, சங்க தலைவர் தேவராசு, செய்தித்தொடர்பாளர் இரிசப்பன், ஆலோசகர் மாயக்கிருஷ்ணன், விவசாய அணி தலைவர் ரங்கநாதன் ஆகியேர் உடனிருந்தனர்.’

Related Stories: