புதுவையில் 150 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

புதுச்சேரி, செப். 18:  புதுவையில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.விநாயகர் சதுர்த்தி கடந்த 13ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் புதுவையின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டது. இந்து முன்னணி சார்பில் சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர தாமரை விநாயகர் சிலை வைக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய அளவிலான சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் சில விநாயகர்களை அந்தந்த பகுதி குடியிருப்பு வாசிகள் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை கடற்கரைக்கு எடுத்து சென்று கரைத்தனர்.இதனிடையே சாரம் அவ்வை திடல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று மதியம் 2 மணியளவில் ஊர்வலமாக வாகனங்களில் புதுவை கடற்கரைக்கு புறப்பட்டன. காமராஜர் சாலை, பட்டாணிக்கடை சந்திப்பு, நேரு வீதி, காந்தி வீதி, அஜந்தா சந்திப்பு, சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட சாலைகள் வழியாக விநாயகர் சிலை வாகன ஊர்வலம் நடைபெற்று பழைய நீதிமன்றம் அருகே கடற்கரை சாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் அனைத்தும் கடலில் கரைக்கப்பட்டது.

புதுவை மட்டுமின்றி அதை ஒட்டிய தமிழக பகுதியான கோட்டக்குப்பம், வானூர் உள்ளிட்ட தமிழக பகுதிகளில் இருந்தும் விநாயகர் சிலைகள் புதுவைக்கு கொண்டு வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. இதையொட்டி புதுவையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து சில மணிநேரம் மாற்றியமைக்கப்பட்டது. சாரம் அவ்வை திடலில் மதியம் 2 மணி முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டன. அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் புஸ்சி வீதி வழியாகவும், அஜந்தா சிக்னல் வழியாக வரும் வாகனங்கள் 45 அடி சாலை வழியாகவும் திருப்பி விடப்பட்டது. இதையடுத்து கார், லாரி, பள்ளி வாகனங்கள், பஸ்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

Related Stories: