உளுந்தூர்பேட்டை பகுதியில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அவதி

உளுந்தூர்பேட்டை, செப். 18:  உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி குடியிருப்புக்கு அருகில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வனத்துறைக்கு சொந்தமான காப்புகாடுகள் மற்றும் விவசாய நிலங்கள் அதிக அளவு உள்ளதால் தினந்தோறும் ஏராளமான குரங்குகள் கூட்டம், கூட்டமாக குடியிருப்பு பகுதிக்கு வந்து பொதுமக்களையும், பள்ளி செல்லும் மாணவர்களையும் அச்சுறுத்தி வருகிறது. காலை நேரத்தில் ஒரு பகுதியில் கூட்டமாக வரும் குரங்குகள் பகல் முழுவதும் ஒவ்வொரு தெருவாக சென்று வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை தூக்கி செல்வதும், கடைகளில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடுவது என தினந்தோறும் நடைபெற்று வருகிறது.

 மேலும் பள்ளி வளாகத்திற்குள் கூட்டமாக செல்லும் குரங்குகள் மாணவர்களின் உணவு பைகளை தூக்கி செல்கிறது.

மேலும் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கூட்டமாக கடிக்க வருவதால் தங்களது பிள்ளைகளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். இதில் வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உளுந்தூர்பேட்டை நகரபகுதியில் கூட்டமாக சுற்றித்திரியும் குரங்குகளை உடனடியாக கூண்டு வைத்து பிடித்து காட்டு பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: