விழுப்புரம் மாவட்டத்தில் அவலம் கிடப்பில் தாலிக்கு தங்கம் திட்டம்

திருக்கோவிலூர், செப். 18: விழுப்புரம் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் 5 ஆயிரம் குடும்பங்கள் தவித்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்படட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை ்எழுந்துள்ளது.தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் தங்களின் பெண் பிள்ளைகள் திருமணத்தை சிரமமின்றி நடத்த பெற்றோர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கமும், பட்டதாரி பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் நிதி உதவியாக வழங்கப்பட்டு வருகிறது.

 இதில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்புகளை சேர்ந்த குடும்பங்களை சேர்ந்த பெண்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநலத்துறை அதிகாரிகளால் விண்ணப்பங்கள் நேரடியாக பெறப்பட்டு அதனை தீவிர பரிசீலனை செய்து பின்னர் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு தகுதியுள்ள பயனாளிகள் பட்டியலை மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் நல உதவிகள் வழங்கப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தில் சிறிது மாற்றம் கொண்டு வரப்பட்டு ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநலத்துறை அலுவலகத்தில் கொடுக்கப்படுகிறது. பின்னர் அந்த மனு அதிகாரிகளின் தீவிர விசாரணைக்கு பின் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெறப்பட்ட சுமார் 5 ஆயிரம் மனுக்கள் தீவிர பரிசீலனை செய்யப்பட்டு பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த திட்டத்தின் கீழ், தாலிக்கு தங்கமும், அதனுடன் வழங்கப்படும் நிதி உதவித்தொகையும் வழங்கப்படவில்லை. இவ்வாறு பெறப்பட்ட அனைத்து மனுக்களும் இன்னும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. பொதுவாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை விண்ணப்பித்த மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்களிலே சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைந்தது. அதன்பின் இந்த திட்டம் பயனாளிகளை சென்றடைய ஓராண்டு காலம் வரை நீடித்தது. தற்போது இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஒரு பயனாளிக்கு கூட இத்திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கமோ அல்லது அதற்கான நிதி உதவித்தொகையோ வழங்கவில்லை. திருமணத்திற்கு முன்பே விண்ணப்பித்திருந்த நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கடன் வாங்கி திருமணம் செய்து வைத்தநிலையில் திருமண நிதி உதவி திட்டம் இப்போது வந்து விடும், அப்போது வந்துவிடும் என்ற கனவில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் கிடைத்தபாடில்லை. இதனால் கடன் வாங்கிய இடத்தில் உரிய பதில்கூட கூற முடியாமல் வட்டி மட்டும் செலுத்தி வருவதால் அவர்கள் தினம் தினம் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுபற்றி சமூகநலத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்ததில் அரசின் நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை. நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் என்று கூறுகின்றனர். தாய்மார்களை அதிகப்படியாக கவரும் வகையில் இந்த திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு நிதி உதவித்தொகையை உயர்த்தியும், தாலிக்கு தங்கம் என்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இது முறையாக பல ஏழை எளிய குடும்பங்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டவர்களுக்கு விரைவில் தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: