குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி பண்ருட்டி ஊராட்சி அலுவலகம் முன் காலிகுடங்களுடன் மக்கள் ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி, செப். 18:   பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் தர்கா பகுதியில் ஊராட்சி நிர்வாகம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு பகுதியில் மட்டும் குடிநீர் இணைப்பின் பைப்பை தனிநபர் ஒருவர் அடைத்துவிட்டதன் காரணமாக தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் அமர்ந்து குடிநீர் வழங்க வேண்டுமென எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஊராட்சி செயலர் சங்கர், துணை பிடிஓ சிவசிதம்பரம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பிரச்னைக்குரிய பகுதிக்கு சென்று தனிநபர் குடிநீர் பைப்பில் அடைப்பு ஏற்படுத்தியதை அப்புறப்படுத்தி மீண்டும் குடிநீர் கிடைக்கும்படி வழிவகை செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: