மணல் குவாரியை தடை செய்யக்கோரி 100 மாட்டுவண்டிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்

காட்டுமன்னார்கோவில், செப்.18:காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடக்கரையில் உள்ள குஞ்சமேடு கிராமத்தில் அரசு மணல்குவாரி இயங்கி வந்தது. இந்த ஆண்டு சம்பா பாசனத்திற்காக ஜூலை 19ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. கல்லணை, முக்கொம்பு அணைகளை கடந்து கீழணைக்கு தண்ணீர் வந்தது. தண்ணீர் வரத்து 40 ஆயிரம் கனஅடிக்கு மேல் இருந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி அன்றே வடவாறு மதகை திறந்து வீராணம்  ஏரிக்கு 2200 கனஅடி தண்ணீரும், கொள்ளிடம் வழியாக கடலுக்கு 37,800 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.இந்நிலையில் கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகரித்ததால் குஞ்சமேடு மணல்குவாரி மூடப்பட்டது. இது ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டுகளில் மாட்டுவண்டிகளுக்கு அப்பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதி மறுக்கப்பட்டு வந்தன. குறிப்பாக ஆழங்காத்தான், சி.அரசூர் பகுதி கொள்ளிட ஆற்றில் டிராக்டர்கள் மற்றும் லாரிகளுக்கு மட்டுமே மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் மாட்டுவண்டிகளுக்கு தனி குவாரி வேண்டும் என்று மாட்டுவண்டி தொழிலாளர்கள்  கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். மணல்குவாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதனையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் ஆழங்காத்தான் மணல் குவாரி மாட்டுவண்டிகளுக்காக ஒதுக்கப்பட்டது. இதில் நாள் ஒன்றிற்கு 200 மாட்டுவண்டிகள் வீதம் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டது. சி.அரசூர் குவாரியில் லாரிக்கும் டிராக்டருக்குமாக ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கீழணைக்கு தண்ணீர் வரத்து குறைந்ததால் கொள்ளிடத்திற்கு கீழணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆற்றில் நீர்வரத்தும் வெகுவாக குறைந்ததால் மீண்டும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதன்பேரில் குஞ்சமேடு பகுதி ஆற்றில் மாட்டுவண்டிகளுக்கு மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று அதிகாலை முதலே மாட்டுவண்டிகள் ஆற்றிற்கு அணிவகுத்தன.

மணல் ஏற்றிக்கொண்டு கரைஓரத்தில் உள்ள சாலையில் வரும்போது குஞ்சமேடு, கருப்பேரி, முட்டம் உள்ளிட்ட கிராமப் பகுதி பொதுமக்கள் மாட்டுவண்டிகளை தடுத்து நிறுத்தினர். மேலும் அள்ளிய மணலை மீண்டும் ஆற்றில் கொட்டிவிட்டு செல்லவேண்டும் என கூறி காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை சுமார் 3 மணிநேரம் மாட்டுவண்டிகளை சிறைபிடித்து மணல்குவாரியை மூட வலியுறுத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் சியாம்சுந்தர் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, கடந்த காலங்களில் அதிகளவில் தங்கள் பகுதியில் மணல்கொள்ளை நடந்ததால் கடல்நீர் உட்புகுந்து தங்களின் விவசாயத்தை பாதித்தது. மேலும் குடிநீரும் உப்புநீராக மாறியது. இதனால் குவாரியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றனர்.இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அசோகன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மணல்குவாரி மூடுவது குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதனை ஏற்று மக்கள் கலைந்து சென்றனர்.பொதுமக்கள் மாட்டுவண்டிகளை சிறைபிடித்து மணல்குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: