ஆரல்வாய்மொழி பொய்கை அணை மறுகால் விரிசல்? நீர் கசிவால் பொதுமக்கள் அச்சம்

ஆரல்வாய்மொழி, செப். 18:  ஆரல்வாய்மொழி பொய்கை அணையின் மறுகால் பகுதியில் நீர் கசிந்து வருகிறது. இதனால் அணையில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  ஆரல்வாய்மொழி - நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் செண்பகராமன்புதூர் மரப்பாலம் பகுதியில் இருந்து சமத்துவபுரம் செல்லும் சாலை வழியாக வடக்கு மலை அடிவாரத்தில் பொய்கை அணை உள்ளது. இந்த அணையை கடந்த 2.10.2000 அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த அணையின் கொள்ளளவு 42.62 அடி. அணையின் நீளம் 1202 மீட்டர். இதில் ஆற்று மதகு, கால்வாய் மதகு என  இரண்டு மதகுகள் உள்ளன.

 ஆற்று மதகு மூலம் கரும்பாட்டு குளம், கிருஷ்ணன் குளம், செண்பகராமன்புதூர் பெரியகுளம், தோவாளை பெரியகுளம், பொய்கை குளம், குட்டிகுளம், ஆரல்வாய்மொழி பெரியகுளம், வைகை குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வருகிறது. மேலும் கால்வாய் மதகு மூலம் அன்னுவத்து குளம், லெட்சுமி புதுகுளம், அத்திகுளம், சாலை புதுகுளம், தெற்கு சிவகங்கை குளம், மேலபாலார் குளம், கீழபாலார் குளம், பழவூர் பெரியகுளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர்  செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் 1357 ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறுகிறது. இந்நிலையில் இந்த அணைக்கு பிரதானமாக தண்ணீர் வரும் சுங்கான் ஓடையில் இருந்து பிரிகின்ற இரப்பை ஆறானது மூடப்பட்டு கரைகள் இன்றி தண்ணீர் முழுவதும் சுங்கான் ஓடையில் இருந்து கடுக்கரை பழையாற்றில் கலக்கிறது.

இதனால் அணை கட்டியதில் இருந்து இதுவரை அணை முழு கொள்ளளவை எட்டவில்லை. எனவே, இந்த அணைக்கு தண்ணீர் வரும் பிரதான ஓடையான சுங்கான் ஓடையில் இருந்து பிரியும் இரப்பை ஆற்றினை சரி செய்து கரைகள் கட்டினால் மட்டுமே தண்ணீர் வர வாய்ப்பு உண்டு என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ₹3 கோடி நிதி ஒதுக்கீட்டில் செண்பகராமன்புதூரில் இருந்து பொய்கை அணைக்கு செல்லும் சாலை மற்றும் இரப்பை ஆற்றினை சரி செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், ஓடை பணி முழுமையடைந்த நிலையில் கடந்த மாதம் பெய்த மழையில் அணையின் நீர்மட்டம் 29 அடியை தொட்டுள்ளது.

அணையின் மறுகால் ஓடை அணையின் இடதுபக்க ஓரமாக உள்ளது. இந்த மறுகால் ஓடையானது கருங்கற்கள் பயன்படுத்தி சுமார் ஐந்து அடுக்காக அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் அணை கட்டியதில் இருந்து 29 அடி அளவு தண்ணீர் வந்தது இதுவே முதல் முறை என்பதால் தண்ணீர் மறுகால் ஓடை வரை நிரம்பி காணப்படுகிறது. அதேவேளை அணையில் உள்ள தண்ணீர் மறுகால் தடுப்பு சுவருக்கு அடியில் கசிவு ஏற்பட்டு  வெளியேறி வருகிறது. இதனால் அணை மறுகால் பகுதியில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

 அணையில் 29 அடி மட்டுமே நிரம்பியுள்ள நிலையில், மொத்த கொள்ளளவான 42.62 அடி தண்ணீர் பெருகினால் மறுகால் உடைப்பு ஏற்பட்டு விடலாம் என பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனே அணை பகுதிக்கு அனுப்பி ஆய்வு செய்து நீர் கசிவினை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: