குமரி மாவட்டத்தில் கடன் வழங்குவதை புறக்கணித்து கூட்டுறவு சங்க பணியாளர்கள் போராட்டம் 80க்கும் மேற்பட்ட சங்கங்கள் பங்கேற்பு

நாகர்கோவில், செப்.18: கடன் வழங்கும் பணிகளை புறக்கணித்து குமரி மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் நேற்று போராட்டதை தொடங்கியுள்ளனர். விவசாய கடன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் எவ்வித ஆவணமும் கேட்காமல் ரூ.2 லட்சம் வரை விவசாய நகைக்கடன் வழங்க அனுமதிக்க வேண்டும். விவசாய கடன்களுக்கு உரம் வழங்கிட மத்திய கூட்டுறவு வங்கிகளால் கட்டாயப்படுத்துதல் கைவிடப்பட வேண்டும். சொசைட்டி உறுப்பினர்களுக்கு குறுகியகால பயிர்க்கடன் அடமானம் பெறாமல் தனிநபர் ஜாமீன் பேரில் ரூ.1 லட்சம் வரை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இதனை ரூ.2 லட்சமாகவும், தொடர் அடமானத்தின் பேரில் வழங்கப்படும் கடன் தொகையை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும் உயர்த்தி வழங்க மாநில அரசு அனுமதிக்க வேண்டும். உர விற்பனையை ஆரம்ப கால நடைமுறைப்படி வினியோகம் செய்திட அனுமதிக்க வேண்டும் அல்லது உர விற்பனையில் ஏற்படும் நஷ்டத்தை முழுமையாக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஏற்படுகிற காலி பணியிடங்களால் பல சங்கங்கள் செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆகவே சங்கங்களில் ஏற்படும் காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பிட ஏதுவாக சங்க தலைவருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். நகை கடனுக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வட்டி வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை மாநில அரசு தீவிரமாக பரிசீலனைக்கு ஏற்று உரிய நடவடிக்கை எடுத்து கூட்டுறவு கடன் சங்கங்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கும் பணியை முற்றிலும் புறக்கணிப்பது என்று கூட்டுறவு பணியாளர் சங்கம் முடிவு செய்திருந்தது.

அந்த வகையில் குமரி மாவட்டத்தில் மொத்தம் 115 கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ள நிலையில் இவற்றில் 80க்கும் மேற்பட்ட சங்கங்களில் நேற்று முதல் கடன் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பணியாளர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். பணியாளர்களின் போராட்டம் காரணமாக நகை கடன் போன்றவை பெற கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி ெசன்றனர்.

Related Stories: