சட்ட மாணவர்கள் மறியல்

சென்னை: கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் அரசு  அம்பேத்கர் சட்டக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரி கேளம்பாக்கம் - வண்டலூர் பிரதான சாலையில் இருந்து 3 கி.மீ.  தூரம் உள்ளே அமைக்கப்பட்டு உள்ளது. போதிய போக்குவரத்து வசதி இல்லை என்று  கூறி சட்ட கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது பிரச்னை செய்து வருகின்றனர். இந்நிலையில்,  நேற்று 3 மணிக்கு வகுப்புகள் முடிந்ததும் மாணவர்கள் கேளம்பாக்கம் -  வண்டலூர் சாலையில் புதுப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர்.  சட்டக்கல்லூரி மாணவர்கள் கும்பலாக இருந்ததை பார்த்த மாநகரப் பேருந்தின் ஓட்டுனர்  பேருந்தை நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த  மாணவர்கள் கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையில் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி, மறியலில்  ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாநகரப் போக்குவரத்துக்  கழக நிர்வாகத்திடம் பேசி அனைத்து பேருந்துகளையும் நிறுத்தத்தில் கண்டிப்பாக  நிறுத்தி மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டுமென அறிவுறுத்துவதாக  உறுதியளித்தார். இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.  இதைத்தொடர்ந்து வந்த மாநகரப்பேருந்தை நிறுத்தி மாணவர்களை இன்ஸ்பெக்டர்  ஏற்றி அனுப்பி வைத்தார்.

Related Stories: