வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி நிலக்கடலையில் உயர் விளைச்சல் பெறுவது எப்படி?

ஆலங்குடி, செப்.12: ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் நிலக்கடலையில் உயர் விளைச்சல் பெறுவது மற்றும் சாகுபடி நுட்பங்கள் குறித்த பயிற்சி நடந்தது. வம்பன் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் லதா தலைமை வகித்தார். உழவியல் துறை உதவி பேராசிரியர் பிரபுகுமார் முன்னிலை வகித்தார். தனலட்சுமி வரவேற்றார். இதனைத்தொடர்ந்து திட்ட ஒருங்கிணைப்பாளர் லதா கூறுகையில், நிலக்கடலை தமிழகத்தில் 3.423 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 9.626 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மானாவாரியாக ஆடிப்பட்டத்திலும், இறவைப்பயிராக மார்கழி பட்டத்திலும் பயிர் செய்யப்படுகிறது. மானாவாரியில் நல்ல மகசூல் பெற கோடை மழையை நிலத்திலே இருத்திடல், உட்புகுந்த மழைநீர் ஆவியாகி விடாமல் தடுப்பது, வறட்சியை தாங்கும் ரகங்கள் பயிரிடுதல், விதைக்கு வறட்சி தாங்கும் திறனை ஊட்டுவது அவசியமாகும்.

மேலும், குத்துக்கடலை ரகங்களான டிஎம்வி 7, விஆர்ஐ2, விஆர்ஐ6, கோ6 மற்றும் விஆர்ஐ 8 ஆகியவற்றை பயிரிடுவதன் மூலம் உயர் விளைச்சல் பெறலாம். குத்துக்கடலை ரகங்கள் 30x10 செ.மீ. என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நிலக்கடலையில் விதை மூலமும், மண் மூலமும் பரவும் வேர் அழுகல், தண்டு அழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களை கட்டுப்படுத்த கார்பென்டாசிம் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் (அல்லது) டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

இறவையில் ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 125 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 50 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். விதைத்த 45ம் நாள் ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். நடமாடும் தெளிப்பு கருவி பயன்படுத்துவதன் மூலம் 20 சதம் நீர் சேமிக்கலாம். மேலும் 30 சதம் விளைச்சல் அதிகரிக்கிறது. ஒரு நாளில் 1 எக்டர் வரை நீர்பாய்ச்சலாம். இவ்வாறு அவர் கூறினார். விவசாயிகளுக்கு சண்முகபாக்கியம், பயிற்சி உதவியாளர் (பயிர் நோயியல்) விதைநேர்த்தி குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

Related Stories: