மின்வாரியம் ஒப்பு கொண்டபடி 2 நாட்களுக்குள் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்ற வேண்டும்

பெரம்பலூர், செப். 12: மின்வாரியத்தால் நிர்ணயித்த 2 நாட்களில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்களை மாற்றித்தர வேண்டுமென பெரம்பலூரில் நடந்த மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் மனு அளித்தது. பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாவட்ட மின்வாரிய குறைதீர் கூட்டம் நடந்தது. கோட்ட செயற்பொறியாளர் பிரகாசம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மின்சாரவாரிய பெரம்பலூர் (வடக்கு) மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்களை உடனுக்குடன் சரி செய்து மாற்றியமைக்க திருச்சி மன்னார்புரம் மெட்ரோ அலுவலகத்தில் குழு செயல்பட்டு வருவதுபோல் பெரம்பலூரிலும் அமைக்க வேண்டும். மின்வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட கெடுநாளான 2 நாட்களில் பழுடைந்த டிரான்ஸ்பார்மர்களை மாற்ற வேண்டும். மின் கட்டணத்துடன் அபராதம் விதித்து வரும் முறையையும், மின்கட்டணத்துடன் இவரியாக 5 சதவீதமும், ஜிஎஸ்டி வரியாக 5 சதவீதமும் என கணக்கிட்டு வசூல் செய்து வரும் முறையை கைவிட வேண்டும்.

கனமழை, சூறைக்காற்று வீசும் நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால் கம்பியின் உராயும் முள், மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும். அடிக்கடி ஏற்படும் மின் தடையை சரி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தளி கிராம மக்கள் அளித்த மனுவில், எழுமூர் சாலையில் கடந்த 1ம் தேதி டிரான்ஸ்பார்மர் பழுதடைந்த காரணத்தால் விவசாயிகள் பயிரிட்டுள்ள கருணை, மஞ்சள், மரவள்ளிக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை விரைந்து சரி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பெரம்பலூர் துறைமங்கலம் அவ்வையார் தெருவில் தேசிய நெடுஞ்சாலைக்கு கிழக்கே குடியிருக்கும் 43 மின் இணைப்புகளை ஏசிஎல் கணெக்சன் எனப்படும் விவசாய இணைப்புகளுக்கு வழங்கும் மின் இணைப்புகளை மாற்றி தந்து தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டுமென கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர் (நகரம்) மாணிக்கம், காரிகால்சோழன், அன்புச்செல்வன் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மின்வாரிய பொறியாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories: