அன்னூர் அருகே டாஸ்மாக் கடைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

கோவை,செப்.12: அன்னூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடையை மூட வேண்டும் எனகோரி கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த கரியாம்பாளையம் பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரனிடம் நேற்று அளித்த மனு: ரியாம்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட வெள்ளாளம்பாளையம், மேல்கதவுகரை, கீழ்கதவுகரை ஆகிய பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் விவசாய கூலி

வேலைக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் செல்கின்றனர். இந்நிலையில்  கடந்த ஆண்டு இப்பகுதியில் டாஸ்மாக் கடை (எண் 2204) அமைக்க அப்பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகிகளும்,டாஸ்மாக் அதிகாரிகளும் முயற்சி மேற்கொண்டனர்.மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அம்முயற்சியை கைவிட்டனர். கடந்த ஒரு ஆண்டாக எவ்வித முயற்சியும் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக முருகேஷ் என்பவரது தோட்டத்தில் கடை கட்டி வருகின்றனர். இங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் பெண்கள், குழந்தைகள், மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே, இங்கு டாஸ்மாக் கடை அமைக்க கூடாது. மீறி அமைத்தால் தொடர் போராட்டம் நடத்துவோம். தமிழக அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைப்போம்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: