குட்கா விற்றால் குண்டர் சட்டம் பாயும்

ஈரோடு, செப். 12: தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கலெக்டர் கதிரவன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக ஈரோடு கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஈரோடு புது மஜீத் வீதியில் லக்காராம் என்பவரது மகன் மனோஜ்குமார்(24) என்பவரின் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 110 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 உணவு மாதிரி எடுக்கப்பட்டு நேற்று முன்தினம் உணவு பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உணவு தொழில் செய்து வரும் வணிகர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. உணவு பாதுகாப்பு துறையினரின் ஆய்வின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்பதோடு தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் உணவு பொருட்களின் தரம் குறித்து 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

Related Stories: