தரமற்ற வடிகால் வாய்க்கால் பணி தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

கடலூர், செப். 12:கடலூர் சாவடி பகுதியில் தரமற்ற முறையில் கட்டிய வடிகால் வாய்க்கால் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.கடலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு கனமழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கடலூர் சாவடி, கோண்டூர், உண்ணாமலைசெட்டி சாவடி, நத்தப்பட்டு உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் போதிய வடிகால் வாய்க்கால் வசதி இல்லாமல் போனதால் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது.

இதையடுத்து இப்பகுதிகளில் வடிகால் வசதி ஏற்படுத்த வாய்க்கால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் கோண்டூர், உண்ணாமலை செட்டி சாவடி, நத்தப்பட்டு  பகுதியில் பணிகள் நடந்து முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் சாவடி, ரட்சகர் நகர் மற்றும் கெடிலம் ஆற்று பகுதிக்கு செல்லும் வடிகால் வாய்க்கால் பணி முழுமையடையாமல் உள்ளது. முறையான ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், போதிய அளவீடு இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை பகுதி மக்கள் ஏற்கனவே கண்டித்து போராட்டம் நடத்திய நிலையில் பணிகளை தரமான முறையில் இருக்க  வேண்டும் என்று துறை அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையே நேற்று பணிகளை அப்பகுதி மக்கள் பார்த்த போது தரமற்ற பொருட்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் தொழிலாளர்களிடம் கேள்வி எழுப்பினர். இதில் இருதரப்பினருக்கும்

வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தரத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தி பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து துணை ஆட்சியர் சரயூவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பணியின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என துணை ஆட்சியர் உறுதியளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: