முஷ்ணத்தில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களால் வியாபாரிகள் அச்சம்

முஷ்ணம், செப். 12: முஷ்ணம் நகரின் கடை வீதியில் கடந்த 2 மாதமாக கடைகளின் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர் கதையாகியுள்ளது. இதுபோன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையும் பிரதான கடை வீதியில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இத்தொடர் திருட்டு சம்பவங்களால் அச்சமடைந்துள்ள வர்த்தக சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள், முஷ்ணம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனை சந்தித்து ஒரு மனு அளித்து கூறுகையில், இப்பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபடும் திருடர்களை விரைவில் பிடிக்க வேண்டும், இரவு நேரங்களில் கடைவீதியில் போலீசார் நிரந்தரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், கடை வீதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பிரதான நான்குமுனை சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதற்கு இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் பதிலளித்து பேசுகையில், கடைவீதியில் உள்ள பெரிய வர்த்தக வியாபாரிகள் ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்புக்காக கேமரா பொருத்தினால் திருடர்களை அடையாளம் கண்டு அவர்களை விரைவில் பிடிப்பதற்கு அது ஏதுவாக இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் கடை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். சமீபத்தில் நடந்த திருட்டு சம்பவத்திலும் விரைவில் திருடர்களை பிடித்துவிடுவோம், என்றார். இம்மனு வழங்கிய போது மாவட்ட வர்த்தக சங்க துணைத்தலைவர் ரவி, முஷ்ணம் நகர வர்த்தக சங்க தலைவர் சிவானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: