தேக்க முடியாமல் வீணாகும் தண்ணீர் வாய்க்கால்களில் காணாமல் போன மதகுகள்

காட்டுமன்னார்கோவில், செப். 12: உள்ளூர் பாசன வாய்க்கால்களின் இருந்த மதகுகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் உள்ளது. இதனால் தண்ணீரை தேக்க முடியாமல் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லட்சுமிக்குடி மற்றும் கொத்தங்குடி கிராம மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. வீராணம் ஏரியில் இருந்து நேரடி பாசனம் பெறும் இப்பகுதிக்கு ஏரியிலிருந்து தென்ரெட்டை வாய்க்கால் மூலம் தண்ணீர் செல்கிறது. இதன்மூலம் சரியாக 1288 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். கடந்த 6 வருடங்களுக்கு மேலாக ஏரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அப்பகுதியில் குறுவை சாகுபடி முற்றிலும் இல்லாமல் போனது. சென்ற 3 வருடங்களில் சம்பா சாகுபடியும் பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில் 3 வருடத்திற்கு பிறகு தென்ரெட்டை வாய்க்காலில் தண்ணீர் வரத்து வரத்தொடங்கியதால் விவசாயிகள் தங்களின் நிலத்தை திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு குடிமராமத்து பணியின் கீழ் தென்ரெட்டை பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டு கரைகள் செம்மைபடுத்தப்பட்டன. இதனால் ஏரியில் இருந்து தங்குதடையின்றி அப்பகுதிக்கு தண்ணீர் செல்கிறது. இருப்பினும் தென்ரெட்டையில் இருந்து பிரியும் சுமார் 100க்கும் மேற்பட்ட உள்ளூர் வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பங்கீடு முறையாக இல்லை. 100 நாள் பணிகளும் அப்பகுதிகளில் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ள நிலையில்,நெய்வாசல், தொருக்குழி, தெ.நெடுஞ்சேரி, லட்சுமிக்குடி மற்றும் கொத்தங்குடி என 5க்கும் மேற்பட்ட விவசாயிகள் அப்பகுதியில் உள்ள தங்களின் வயல்களுக்கு செல்லும் உள்ளூர் கிளைவாய்க்கால்களை தங்களின் சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் தென்ரெட்டை பாசன வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் அனைத்து உள்ளூர் வாய்க்காலுக்கும் மதகுகள் இருக்கும். இவைகள் மரப்பலகைகள் மற்றும் இரும்புகளால் இருந்து வந்துள்ளன.

தற்போது கடந்த 10 ஆண்டுகளாக இந்த மதகுகள் சேதமடைந்து பல இடங்களில் மதகு இருந்த தடயமே இல்லாமல் போனது. இதன் காரணமாக தண்ணீர் வரத்து வரும் காலங்களில் தேக்கமுடியாமல் குறிப்பிடும் வகையில் தண்ணீர் கான்சாகிப் வடிகால் வாய்க்காலுக்கு சென்றுவிடுகின்றன. இதனால் தண்ணீர் சேமிக்கமுடியவில்லை. நீர்வரத்து வரத்தொடங்கிய சில மாதத்திற்குள் ஏரி வறண்டு வாய்க்காலுக்கு தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்படும்.தேவையான தண்ணீர் கிடைக்காத காரணத்தால் மகசூல் குறைவதோடு பூச்சிகளின் தாக்குதலுக்கு பயிர் ஆளாகும். பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் தென்ரெட்டை வாய்க்காலில் கடந்த காலங்களில் இருந்தது போல் உள்ளூர் வாய்க்காலுக்கு சிறியவகை மதகுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அப்படி செய்யும் பட்சத்தில் உபரிநீர் வடிகாலுக்கு செல்லாமல் வாய்க்கால்களில் தேக்கலாம் மேலும் பருவத்திற்கு தகுந்தாற்போல் அதிலிருந்து நெல்வயல்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்ச முடியும்.உள்ளூர் வாய்க்கால்களில் மதகுகள் அமைத்து தண்ணீர் தேக்குவதன் மூலம் நிலத்தடி நீரையும் குறிப்பிட்ட அளவில் உயர்த்த முடியும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வீராண பாசனம் விவசாயிகள் சங்கத்தலைவர் பாலு கூறுகையில்: தென்ரெட்டை மட்டும் அல்லாமல் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு செல்லும் 34 வாய்க்கால்களில் இருந்து பிரியும் ஆயிரக்கணக்காக உள்ளூர் வாய்க்கால்களுக்கும் இதுபோன்ற மதகுகள் அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல இருபோகமும் விளைச்சல் சிறப்பாக இருக்கும். மானிய விலையில் நெல்விதை மற்றும் விவசாய இடுபொருட்கள் உழவுமானியம் ஆகியவைகள் விவசாயிகளுக்கு முறையாக கிடைக்க சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். மேட்டூர் திறக்கப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகியும் கடைமடைகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், விவசாய தொழிலாளர்களுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தார்.

Related Stories: