வாணியம்பாடியில் பரபரப்பு மூடப்பட்ட ரயில்வே கேட்டுக்கு ‘நினைவு தினம்’ போஸ்டர் ஒட்டிய பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தப்போவதாக அறிவிப்பு

வாணியம்பாடி, செப்.12: வாணியம்பாடி நகரில் நியூ டவுன் ரயில்வே கேட் மூடி ஓராண்டாகியும் பாலம் கட்டாததை கண்டித்து பொதுமக்கள் நினைவு தினம் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நகரின் நடுப்பகுதியில் உள்ளது நியூ டவுன் ரயில்வே கேட். வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் உள்ள இந்த ரயில்வே கேட்டின் மற்றொருபுறம் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் கல்லூரிகள் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள், பொதுமக்கள், மாணவர்கள் சென்று வருகின்றனர்.இந்த ரயில்ேவ கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக கடந்த 11.9.2017 அன்று இந்த கேட் மூடப்பட்டு பாலம் கட்டுமானப்பணிகளுக்காக ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நிறுத்தப்பட்டது.

கடந்த ஓராண்டு ஆகியும் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கவில்லை. இதனால் அப்பகுதிகளுக்கு சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்கின்றனர். எனவே பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறும், இல்லாவிட்டால் பாலம் பணி நடைபெறும் வரை ரயில்வே கேட் திறக்கவேண்டும் எனக்கூறி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், ரயில்வே கேட் மூடப்பட்டு நேற்றுடன் ஓராண்டு முடியும் நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று திரண்டு, ‘ரயில்வே கேட்டுக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம்’ என போஸ்டர் அச்சடித்து நகர் முழுவதும் ஒட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: