சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 16 வயது சிறுமியின் கரு கலைந்தது

சேலம், செப்.11: மனநலம் குன்றிய நிலையில் கர்ப்பம் தரித்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமியின் கரு கலைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் அந்த சிறுமிக்கு கருகலைப்பு செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் தெரிந்த சூரமங்கலம் மகளிர் போலீசார், அந்த சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் போலீசாரை கடிந்து கொண்டதுடன், உங்களிடம் புகார் செய்யவில்லை, ஏன் தேடி வந்து தொந்தரவு செய்கிறீர்கள் என்று விரட்டினார்.முன்னதாக அந்த சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், அவர் அரசு உதவி பெறும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து தான் அவர் மருத்துவமனைக்கு வந்தது தெரிந்தது. போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு யார் காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஆசாமி யார் என்று தாய்க்கு தெரியும். ஆனாலும் அவர் போலீசாரிடம் சொல்ல மறுத்து வருகிறார். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சிறுமியின் கரு நேற்று முன்தினம் கலைந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 6 மாத கர்ப்பம் தானாக கலைய வாய்ப்பு இல்லை எனவும், டாக்டர்கள் கருவை கலைத்தார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories: