சிவகாசி தாலுகா அலுவலகத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் விண்ணப்பங்கள்

சிவகாசி, செப். 11: சிவகாசி தாலுகா அலுவலகத்தில், கோரிக்கைகளுக்கான விண்ணப்பங்களை அதிக விலைக்கு விற்பதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.  சிவகாசி அருகே, சாட்சியாபுரத்தில் தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கு வட்ட வழங்கல் பிரிவு, ஆதார் சேவை மையம், இ.சேவை மையம், தேர்தல் அலுவலகம் ஆகியவை உள்ளன. சாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்று, முதல்பட்டதாரி சான்று, ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல் மற்றும் ஆதார் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிக்களுக்காக நூற்றுக்ககணக்கான பொதுமக்கள் தினமும் விண்ணப்பம் அளிக்க வருகின்றனர்.

பொதுவாக சான்றிதழ்கள் கேட்டு வரும் பொதுமக்கள், அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இ.சேவை மையம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் கொடுக்க வேண்டும். சில விண்ணப்பங்களை கையில் எழுதி கொடுக்க வேண்டியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர், பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை இலவசமாக வழங்கி, அவைகளை பூர்த்தி செய்து கொடுக்க தாலுகா அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், கிராம மக்கள் பயனடைந்தனர்.

அடுத்தடுத்து வந்த அதிகாரிகளின் ஆர்வமின்மையால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது மனுவுக்கும், அதனை எழுதவும் பணமும் வாங்குகின்றனர். தாலுகா அலுவலகத்தில் ஒரு மனு கொடுக்க சுமார் ரூ.30 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. ஒரு பக்க வெள்ளைத் தாளில் ஜெராக்ஸ் எடுக்க 2 ரூபாய் ஆகிறது. ஆனால், ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட விண்ணப்பங்களை ஒரிஜினல் போல விற்பனை செய்கின்றனர். 2 ரூபாய் மதிப்புள்ள விண்ணப்பங்களை ரூ.3, ரூ.5, ரூ.6 என விற்பனை செய்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்கின்றனர். படிக்காத பாமர மக்கள் மட்டுமன்றி படித்தவர்களும் அவர்கள் கூறும் விலைக்கு விண்ணப்பங்களை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகம் இலவசமாக வழங்க வேண்டும்.  படிக்காத பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும், மனு எழுதவும் ஊழியர் ஒருவர் நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: