காரியாபட்டியில் பராமரிப்பின்றி பாழான காவலர் குடியிருப்பு

காரியாபட்டி, செப். 11: காரியாபட்டியில் உள்ள காவலர் குடியிருப்பு பராமரிப்பின்றி புதர்மண்டிக் கிடக்கிறது. இதனால், போலீசார் வாடகை வீடுகளில் குடியேறியுள்ளனர்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் காவலர் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பில் 15 வீடுகள் உள்ளன. ஆரம்ப காலங்களில் போலீசார் மற்றும் எஸ்.ஐ குடியேறினர். இந்த குடியிருப்பை முறையாக பராமரிக்காததால் நாளடைவில் போலீசார் வாடகை வீடுகளில் குடியேறத் தொடங்கினர். தற்போது குடியிருப்பில் யாரும் இல்லை. எங்கும் புதர்மண்டிக் கிடக்கிறது. 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. குடியிருப்புகளுக்கு பின்னால், கழிவுநீர் வாறுகால் செல்கிறது. இந்த வாறுகளில் பன்றிகள் உலா வருகின்றன. குடிநீர், சாலை, வாறுகால் வசதியில்லை. சில வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளன. மழை காலங்களில் அந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுகிறது. மேலும், காவலர் குடியிருப்பு குற்றச்சம்பவங்கள் நடக்கும் இடமாக மாறிவிட்டது. எனவே, காரியாபட்டியில் உள்ள காவலர் குடியிருப்பை பராமரித்து மீண்டும்  போலீசார் குடியிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், காரியாபட்டியைச் சுற்றியுள்ள ஆவியூர், மல்லாங்கிணறு, முக்குளம் காவல்நிலையங்களில் பணிபுரியும் போலீசார் குடியிருப்பு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருக்கின்றனர். இதனால், குற்றச்சம்பவங்கள் நடக்கும்போது அவர்கள் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனவே, அவர்களுக்கு பணிபுரியும் இடங்களில் குடியிருப்பைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என

வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: