வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்று தரைப்பாலத்தில் தடுப்புகள் சேதம்

சிவகாசி, செப். 11: வெம்பக்கோட்டை ஒன்றியம் புளிப்பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள பைப்பாற்று தரைப்பாலத்தில் தடுப்புக்கம்பிகள் சேதமடைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் புளிப்பாறைப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து திருவேங்கடபுரம் செல்லும் சாலையில் குறுக்கே வைப்பாறு செல்கிறது. திருவில்லிபுத்தூர், அச்சதம்தவிர்த்தான், நதிக்குடி, மல்லி பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த ஆறு வழியாகச் சென்று வெம்பக்கோட்டை அணையில் தேங்குகிறது. மழை காலங்களில் வைபாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது, வாகன போக்குவரத்து தடைப்பட்டது. இதனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு புளிப்பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள வைப்பாற்றில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலத்தின் வழியாக ஆலங்குளம், ராஜபாளையம் பகுதிக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் பட்டாசு ஆலைகள் அதிகமாக இருப்பதால், பட்டாசு ஆலை வாகனங்களும் சென்று வருகின்றன. ஆலங்குளம், ராஜபாளையம்  பகுதிகளை இணைக்கும் முக்கியச் சாலையாக இருப்பதால், புளிப்பாறைப்பட்டி தரைப்பாலத்தில் எந்த நேரமும் வாகன போக்குவரத்து இருக்கும்.

இந்நிலையில், பாலத்தின் அருகே, வைப்பாற்றில் 5 அடி உயர நீர் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. ஆனால், பாலம் முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்துள்ளது. மழை காலங்களில் தரைப்பாலத்தில் செல்லும் வெள்ளத்தை அளவிடுவதற்காக நீர் அளவீட்டு கருவிகள் நிறுவப்படவில்லை.

பாலத்தில் இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைத்துள்ளனர். தற்போது இந்த கம்பிகள் துருப்பிடித்து சேதமடைந்துள்ளன. இதனால், இரவு நேரங்கள் மற்றும் மழை காலங்களில் வாகனங்கள் வைப்பாற்றில் கவிழும் அபாயம் உள்ளது. எனவே, புளிப்பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள பாலத்தில் பாராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, தடுப்புக் கம்பிகளை அமைக்கவும், வெள்ள நீர் அளவீட்டு கருவிகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: