பாலக்காட்டில் கடையடைப்பு

பாலக்காடு,செப்.11: பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடு தழுவிய முழுஅடைப்புக்கு எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.  கேரள மாநிலம் பாலக்காட்டில் நேற்று முழுஅடைப்பிற்கு ஆதரவு தெரிவித்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. ஆட்டோ, டாக்சி, சுற்றுலா வாகனங்கள் மற்றும் லாரிகள் ஓடாததால், சாலை முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன. இது போல மாவட்டம் முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் அடைக்கப்பட்டன.  அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளும் நேற்று செயல்படவில்லை.பேருந்துகள் ஓடாததால் கிராமப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அட்டப்பாடி, பரம்பிக்குளம் மற்றும் நெல்லியாம்பதி ஆகிய இடங்களில் உள்ள மக்கள் வேலைக்காக நகர் பகுதிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கியதால் பாலக்காடு டவுண் ரயில் நிலையத்திலிருந்து கோவை, ஈரோடு,சேலம் செல்கின்ற பயணிகள் ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  வெளிமாநிலத்திலிருந்து வந்த ரயில் பயணிகள் பேருந்துகள்,ஆட்டோக்கள் ஓடாததால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர்.  மாவட்டம் முழுவதும் நேற்று பெட்ரோல் பங்குகளும் அடைக்கப்பட்டிருந்தன.

Related Stories: