கோவையில் கடைகள் அடைப்பு

கோவை, செப்.11: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நடந்த வேலை நிறுத்தத்தால் கோவையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்டோ, லாரிகள் ஓடவில்லை. இதனால் மக்களின்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்.,தலைமையிலான எதிர்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நேற்று மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால், கோவையில் நேற்று டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, சுக்ரவார்பேட்ைட, ஆர்.எஸ்.புரம், உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அரசு பஸ்கள் 20 சதவீதம் ஓடவில்லை. ஏடிபி மற்றும் பிஎம்எஸ்  தொழிற்சங்க ஆட்டோக்களை தவிர இதர சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால்,  கோவையில் 80 சதவீத ஆட்டோக்கள் இயங்கவில்லை. கோவை உக்கடம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வர வேண்டிய கேரள அரசு பஸ்கள் வரவில்லை. பாலக்காடு, ஆனைகட்டி, நீலகிரி, வால்பாறை, உடுமலை வழியாக கேரளாவிற்கு செல்ல வேண்டிய தமிழக அரசு பஸ்களும் செல்லவில்லை.

இதனால் இந்த பஸ் நிலையங்களில் கேரள பஸ்கள் நிற்குமிடங்கள்  வெறிச்சோடியது.

சரக்கு லாரிகள், மணல் லாரிகள் ஓடவில்லை. தியேட்டர்களில் காலை காட்சிகள் மட்டும் ரத்து செய்யப்பட்டிருந்தது. கோவையில் உள்ள தொழில் அமைப்புகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன. பெரும்பாலான நகைகடைகள், ஜவுளி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்பட பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.   

 மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி,  கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கின. பள்ளிகளில் நேற்று பத்தாம்வகுப்பு, பிளஸ் 1 மற்றும்  பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு காலாண்டு பொதுத்தேர்வு வழக்கம் போல் நடந்தது. பந்த் காரணமாக மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டிருந்தது.

Related Stories: