பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சாலை மறியல்

மதுரை, செப்.11: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மறியல், ஆர்ப்பாட்டத்தால், 60 சதவீதம் வாகனங்கள் இயங்கவில்லை. பல்வேறு இடங்களிலும் கடைகள்  அடைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதில் திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றன. மதுரையில், பஸ், லாரி, ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்கள் 60 சதவீத அளவில் ஓடின. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் போர்வெல் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் துவங்கிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்றும் தொடர்ந்தனர்.

மதுரையில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் முழுமையாக போராட்டத்தில் பங்கேற்றனர்.

* மதுரையில் மாவட்ட போர்வெல் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஏஜெண்ட்கள் நல சங்கத்தின் தலைவர் சுரேஷ் கூறுகையில் ‘மதுரை மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட ‘போர்வெல்’ லாரிகள் உள்ளன. இதில் 2500 பேர் வேலை பார்த்து வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதுரையில் போர்வெல் கிணறு தோண்டாமல் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளோம்’ என்றார். மதுரை சிஐடியூசி ஆட்டோ சங்க நிர்வாகி ஜான் கூறுகையில், ‘‘மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சங்கத்தின் ஆட்டோக்கள் முழுமையாக ஓடவில்லை’’ என்றார்.பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சார்பில் மதுரை அண்ணாநகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யதுபாபு, துரையரசன், முருகேசன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் திமுகவை சேர்ந்த தளபதி, வேலுச்சாமி, குழந்தைவேலு, தமிழரசி, மதிமுகவை சேர்ந்த பூமிநாதன், ஜனதாதளம் பொதுச்செயலாளர் ஜான்மோசஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக், ஆதிதமிழர் பேரவை மற்றும் அனைத்துக்கட்சி நிர்வாகிகள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர்.முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத், காமராஜர் சாலை உள்பட பல பகுதிகளில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, பொதுமக்களிடம் ஆதரவு வேண்டி துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இதில் மாநகர் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.எஸ்டிபிஐ கட்சி வர்த்தகர் அணி பிரிவு சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி மதுரை கோரிப்பாளையத்தில் நூதன போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் ஜியாவுதீன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சீமான் சிக்கந்தர் முன்னிலை வகித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் ஆட்டோவை கயிறு கட்டி மாட்டின் முகமூடி அணிந்த இருவர் வெள்ளை சீருடையில் அப்பகுதியில் இழுத்து வந்தனர். மேலும் டிரை சைக்கிளில் டூவீலரை வைத்து மாலை அணிவித்து, டூவீலர் மீது ஹெல்மெட் அணிந்து ஒருவர் உட்கார்ந்திருக்க டிரை சைக்கிளை ஒருவர் ஓட்டி வந்தார். இதில் நிர்வாகிகள் சாகுல் அமீது, நாகூர் கனி, கோரிப்பாளையம் சிக்கந்தர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: