தமிழகத்தில் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான இணையதள பக்கங்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை திட்டம்

வேலூர், செப்.11:வேலைதேடும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி தரும் வகையில் டிஜிட்டல் வேலைவாய்ப்பு இணையதள பக்கங்களை உருவாக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் சுயதொழில் முனைவோர் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்க திறன்மேம்பாட்டு பயிற்சிகள், அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதுவரை தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 44 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இம்முகாம்களில் ஆட்களை தேர்வு செய்ய வரும் நிறுவனங்கள் தனித்திறன் வாய்ந்தவர்களையே தேடி வருகின்றன.

ஆனால், எதிர்பார்ப்புக்கேற்ற ஆட்கள் குறைவான அளவிலேயே கிடைக்கின்றனர். தங்கள் நிறுவனத்துக்கு 2 ஆயிரம் பேர் தேவை என்றாலும், வெறும் 100 முதல் 150 பேர் வரையே தேர்வு செய்யும் நிலை உள்ளது. இதற்கு முகாமில் கலந்து கொள்ளும் கலை அறிவியல் பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் அதற்குரிய திறன்களை பெற்றிருப்பதில்லை என்பதே காரணம். இதனால் வாய்ப்புகள் இருந்தும் அவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை உள்ளது.இதனை தவிர்க்க படித்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் வேலை தேடி நிறுவனங்களை நாடி செல்லும் முன்னரே தங்களது திறன்களை சுயமதிப்பீடு செய்து கொள்ளும் வகையில் பிரத்யேக இணையதள பக்கத்தை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உருவாக்கி வருகிறது. இது இளைஞர்கள் தங்களது பணிக்கான திறனை பரிசோதித்துக் கொள்ளவும், தேவைப்பட்டால் தங்கள் தனித்திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் உதவும்.

இதுதொடர்பாக வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் கூறும்போது, ‘படித்த வேலையற்ற இளைஞர்கள், வேலைதேடுவோர், கல்லூரி மாணவர்கள் இந்த இணையதள பக்கத்தில் சென்று அதில் கோரப்படும் தகவல்களை அளிக்க வேண்டும். அதன் மூலம் துறைவாரியாக தங்களுக்கான திறன்கள், எந்த துறையில் அதிக ஆர்வம் உள்ளது என்பதை அறிய முடியும்.அதில் கிடைக்கும் பதிலை பெற்று, பின்னர் தங்களது விருப்பத்துக்கேற்ற வகையில் பயிற்சி மூலம் திறனை வளர்த்துக் கொண்டு, மீண்டும் இணையதள பக்கத்தில் மதிப்பீடு செய்யும்போது, போதிய திறனை பெற்றிருந்தால் அதில் ‘ஸ்கில் ஓகே’ என்று வரும். இவ்வாறு சுயமதிப்பீடு செய்த பின்னர், மிகப்பெரும் நிறுவனங்களை நாடும்போது, எளிதாக அதிக ஊதியத்துடன் வேலைவாய்ப்பை பெறலாம்.

இதுதவிர வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை அளிக்கும் தனியார் சார்ந்த இணையதள பக்கங்கள், செயலிகள் பல தற்போது வந்துள்ளன. அவற்றின் வகை சார்ந்த இணையதள பக்கம் ஒன்றும் தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் உருவாக்கப்பட்டு வருகிறது.வேலைதேடுவோர் இதில் தங்களது கல்வித்தகுதி உட்பட அனைத்து விவரங்களையும் பதிவு செய்தால், அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் எந்த நிறுவனத்தில் உள்ளது? அந்த நிறுவனம் எங்கு உள்ளது? எப்படி விண்ணப்பிப்பது? போன்ற தகவல்கள் உடனுக்குடன் அளிக்கப்படும்.டிஜிட்டல் வேலைவாய்ப்பு முகாம் என்ற தலைப்பில் ₹87 லட்சம் செலவில் பிரத்யேகமாக மேற்கண்ட இணையதள பக்கங்கள் உருவாக்கப்படுகிறது. இவை செயல்பாட்டுக்கு வரும்போது, வேலை தேடுவோருக்கு நல்ல பலனை தரும்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: