திருப்பத்தூர் நகராட்சியில் நடந்துள்ள பல்வேறு குளறுபடிகள் குறித்து விசாரணை புதிய நகராட்சி ஆணையாளர் தகவல்

திருப்பத்தூர், செப். 11: திருப்பத்தூரில் நகராட்சியில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்து விசாரிக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.திருப்பத்தூர் நகராட்சியில் கடந்த மூன்றாண்டு காலமாக ஆணையாளர் இல்லாமல் நகராட்சிப் பொறியாளர் அசோக்குமார் (பொறுப்பு) செயல்பட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி ஆணையாளர் நாராயணன் கூடுதல் பொறுப்பாக திருப்பத்தூர் நகராட்சி ஆணையராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சென்னை பம்மல் நகராட்சியிலிருந்து திருப்பத்தூர் புதிய நகராட்சி ஆணையராக சந்திரா ேநற்று பொறுப்பேற்றார்.பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில் ‘ திருப்பத்தூர் நகராட்சியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. அதன்மீது விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும் நகராட்சியில் உள்ள சினிமா தியேட்டர்கள் கேளிக்கை வரி நகராட்சிக்கு செலுத்தாமல் உள்ளது. உடனடியாக செலுத்தாவிட்டால், சினிமா தியேட்டர்களுக்கு சீல் வைக்கப்படும்.

மேலும் நகராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து தூய்மையான நகராட்சியாக மாற்றுவேன் என்றார்.தொடர்ந்து, நேற்று பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று சாலையில் குப்பைகளை வீசக்கூடாது. அதற்காக நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் குப்பைகளை கொட்ட வேண்டும். சாலைகள் மற்றும் தெருக்களில் குப்பைகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருப்பத்தூர் பெரிய ஏரி பகுதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் புகார்கள் வந்துள்ளது. அப்படி இறைச்சி கழிவுகள் கொட்டும் இறைச்சி கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக என்னிடம் வந்து தெரிவிக்கலாம். எந்த நேரத்திலும் பொதுமக்களுக்காக பணிகளை செய்ய தயாராக இருக்கிறோம் என்றார்.

Related Stories: