மத்திய மாவட்ட திமுக சார்பில் சேலத்தில் கருணாநிதிக்கு புகழ் வணக்க கூட்டம்

சேலம், செப்.9: சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில், மறைந்த தலைவர் கருணாநிதிக்கு புகழ் வணக்க கூட்டம் நாளை மாலை நடக்கிறது. தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த மாதம் 7ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவை தொடர்ந்து, கருணாநிதிக்கு புகழ் சேர்க்கும் வகையில், மாநிலம் முழுவதும் திமுக சார்பில் புகழ் வணக்க கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நாளை (10ம் தேதி) மாலை 4 மணிக்கு புகழ் வணக்க கூட்டம் நடக்கிறது. சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு, மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகிக்கிறார்.

இதில், திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்பி கலந்து கொண்டு, புகழ் வணக்கம் செலுத்துகிறார். இதேபோல், எழுத்தாளர் வெங்கடேசன் மற்றும் கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் தெரிவித்து பேசுகின்றனர். இதில், மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: