வனச்சரகர் பதவி உயர்வில் குளறுபடி

கோவை: தமிழகத்தில் வனவர்கள் வனச்சரகராக பதவி உயர்வு செய்யப்பட்ட தேர்வில், அரசாணையை பின்பற்றவில்லை எனவும், குளறுபடி நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் வனத்துறையில் வளர்ச்சி திட்டங்கள், மனித விலங்கு மோதல், ஆக்கிரமிப்பு அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள வனச்சரக அலுவலகங்களில் வனச்சரகர் பற்றாக்குறை இருக்கிறது. இந்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது. மேலும், வனச்சரகர் பணியிடத்திற்கு வனவராக 8 வருடங்கள் பணியாற்றியவர்கள் தகுதியானவர்கள் என்பதை 2 ஆண்டுகள் குறைத்து 6 வருடங்கள் வனவராக பணியாற்றியவர்கள் வனச்சரகராக பதவி உயர்வு பெற தகுதியானவர்கள் என புதிய அரசாணை வெளியிடப்பட்டது.அதன்படி, 2017-18ல் பதவி உயர்வு மூலமாக தமிழகம் முழுவதும் 66 இடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. 178 வனவர்கள் சீனியாரிட்டி முறையில் வனச்சரகராக பதவி உயர்வு பெற தகுதியானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், 66 இடங்களில் 3 பேர் முழுமையாக தகுதி பெற்றவர்கள் எனவும், 63 இடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என முதன்மைசெயலர் நசீமுதின் அரசாைணயை கடந்த மாதம் 23ம் தேதி வெளியிட்டார். இதனை தொடர்ந்து, கடந்த 6ம் தேதி முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை வௌியிட்டார். இதில், 111 பேர் பெயர்கள் இடம் பெற்று உள்ளது. பட்டியலின் அடிப்படையில், வனச்சரகராக 35 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வனச்சரகராக பதவி உயர்வு பெற முடியாமல் வனவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாகவும், அரசாணையை பின்பற்றவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், அரசாணையில், 178 பேர் சீனியாரிட்டியில் இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது 111 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 35 பேர் மட்டுமே வனச்சரகராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அரசாணை 119ல் கூறப்பட்ட எந்த விதிமுறையும் கடைப்பிடிக்கவில்லை. இந்த பட்டியலில் குளறுபடி நடந்துள்ளது. சீனியாரிட்டி அடிப்படையிலான புதிய பெயர் பட்டியலை வெளியிட்டு, முறையாக பதவி உயர்வு அளிக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றம் வரை செல்வோம்” என்றனர்.   இது குறித்து தலைமை முதன்மை வனபாதுகாவலர் உபாத்யாய்விடம் கேட்ட போது “விதிமுறைகளின்படி தான் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.  

Related Stories: