பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பம்ப்செட் உற்பத்தி, விற்பனை 35% பாதிப்பு

கோவை: ஜிஎஸ்டி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மோட்டார் பம்ப்செட் தொழிலில் உற்பத்தி மற்றும் விற்பனை 35 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.நாட்டில் உற்பத்தியாகும் மொத்த மோட்டார் பம்ப்செட்களில் 50 சதவீதம் கோவையில் உற்பத்தியாகிறது. வீடு, விவசாயம் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கு தேவையான மோட்டார் பம்ப்செட்கள் ₹2 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை விற்பனையாகிறது. கோவையில் மட்டும் 3 ஆயிரம் மோட்டார் பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின்னர் மோட்டார் பம்ப்செட் மூலப்பொருட்களுக்கு 18 முதல் 28 சதவீதம் வரையும், மோட்டார் பம்ப்செட் விற்பனைக்கு 12 சதவீதமும் விதிக்கப்பட்டது. முன்பு மூலப்பொருள் மற்றும் விற்பனைக்கு 5 சதவீதம் இருந்த நிலையில், ஜிஎஸ்டி வரி உயர்வால் மோட்டார் உற்பத்தி செலவு அதிகரித்தால், உற்பத்தியும், விற்பனையும் 15 சதவீதம் பாதிக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த ஆண்டு ஜிஎஸ்டி அமலான ஜூலை முதல் இதுவரையிலான 14 மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹14.86ம், டீசல் விலை லிட்டருக்கு ₹18.20ம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்து விலையை விட அதிகரித்துள்ளது. மோட்டார் பம்ப்செட்டுக்கான உதிரிபாகங்களில் 70 சதவீதம் பெட்ரோலிய பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மோட்டார் பம்ப்செட் உதிரிபாகங்களின் விலையும் 15 சதவீதம் உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலை உயரும்போதெல்லாம், உதிரிபாகங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதோடு, வட இந்தியாவில் இருந்து மோட்டார் பம்ப்செட்கள் கொண்டு வரப்படுவதால், சரக்கு போக்குவரத்து வாகன கட்டணமும் முந்தைய விலையை விட டன்னிற்கு ₹2 ஆயிரம் அதிகரித்துள்ளது. இதனால் மோட்டார் பம்ப்செட்களின் உற்பத்தி செலவு மேலும் 20 சதவீதம் அதிகரித்து, உற்பத்தி மாதம் தோறும் பாதிக்கப்பட்டு வந்து, தற்போது நலிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறுகையில், ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பிறகு மோட்டார் பம்ப்செட் உற்பத்தி மற்றும் விற்பனை 35 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் பம்ப்செட்டிற்கு தேவையான மூலப்பொருட்களுக்கான வரியையும், விற்பனை வரியையும் 5 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். இதை மேற்கொண்டால்  மோட்டார் பம்ப்செட் தொழில் நலிவிலிருந்து காப்பாற்றப்படும். இல்லாவிட்டால் கோவையின் அடையாளமாக விளங்கும் பம்ப்செட் தொழில் அழிந்துவிடும்’ என்றார்.

Related Stories: