திருச்சுழி பகுதியில் மணல் கொள்ளையர்களால் அதிகாரிகள் காட்டில் பணமழை உற்சாகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்

திருச்சுழி, செப். 7: திருச்சுழி பகுதியில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் காட்டில் பணமழை பொழிகிறது. திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களில் பல்வேறு கிராமங்களை ஒட்டி குண்டாறு, கிருதுமால் நதி செல்கிறது. இந்த ஆறுகளில் கடந்த சில ஆண்டுகளாக மணல் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. திருச்சுழியிலிருந்து காரியாபட்டிக்கு செல்லும் சாலையில் கிருஷ்ணாபுரம், ஆத்திக்குளம், பனிக்குறிப்பு, கிழவனேரி, கமுதி செல்லும் சாலையில் பனையூர், சேதுபுரம், இலுப்பையூர் ஆற்றுப்படுகை பகுதியில் மணல் எடுத்து மிகப்பெரிய பள்ளங்களாக காணப்படுகிறது. சில மாதங்களாக திருச்சுழி, வீரசோழன், பச்சேரி, முத்துராமலிங்கபுரம், இலுப்பையூர் ஆகிய பகுதியில் மணல் குவாரி அமைத்து மணல் அள்ளப்பட்டு வந்தது.

இருப்பினும் பரட்டநத்தம், சாமிநத்தம், பனையூர் ஆகிய பகுதிகளிலுள்ள குண்டாறு மற்றும் பட்டா நிலங்களில் சில நபர்கள் மட்டும் இரவு, பகல் பாராமல் மணல் அள்ளப்பட்டு காட்டுப் பகுதியில் அரசு அனுமதியின்றி கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்படும் வகையில் யார்டு அமைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்தனர். மணல் குவாரி அமைக்கப்பட்ட பின்னர் வாடிக்கையாளர்கள் குறைந்ததால் அதிகாரிகளை கவனிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் அவ்வப்போது வழக்குகள் பதியப்பட்டன.

இந்நிலையில் நேற்று முன்தினம் உயர்நீதிமன்ற மதுரை கிளை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி, காரியபட்டி, அருப்புக்கோட்டை ஆகிய தாலுகாவில் சவடு மணல் குவாரிக்கு அனுமதி வழங்க தடை விதித்ததால் மணல் குவாரி முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனையறிந்த மணல் மாபியாக்கள் தங்கள் கைவரிசைகளை காட்டுவதற்கு தயாராகி வருகின்றனர். ேமலும் மணல் குவாரிக்கு தடை விதித்ததையொட்டி திருட்டு மணல் அடிக்கும் நபர்கள் உற்சாகத்துடன் கேக் வெட்டி கொண்டாடியதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

இதேபோல் அதிகாரிகள் ஏற்கனவே மாமூல் செல்வதையொட்டி தற்போது தடையை காரணம் காட்டி இருமடங்காக உயர்த்தி தருமாறு நெருக்கடி கொடுப்பதாகவும் கூறுகின்றனர். இதனையறிந்த விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும் சில அதிகாரிகள் காட்டில் பணமழை பொழிகிறது. இதனால் இப்பகுதியில் பணியாற்ற பல லட்ச ரூபாய் கொடுத்து மாறுதல் வாங்க பல அதிகாரிகள் தயாராகி வருவதாகவும் தகவல் பரவுகிறது.

Related Stories: