விருதுநகரில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற மல்லாங்கிணர் சாலையில் தொடரும் உயிர் பலிகள்: கொதிப்பில் ரோசல்பட்டி ஊராட்சி பகுதி மக்கள்

விருதுநகர், செப். 7: விருதுநகரில் போக்குவரத்திற்கு லாயக்கற்ற மல்லாங்கிணர் ரோட்டில் உள்ள குழிகளில் விழுந்தும், வாகனங்களில் சிக்கியும் தினசரி உயிரிழப்புகள் நடந்து வருவது மக்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கி உள்ளது.விருதுநகரில் மல்லாங்கிணர் ரோடு, டிடிகே ரோடு, அருப்புக்கோட்டை ரோடு, சாத்தூர் ரோடு, சிவகாசி ரோடு, மதுரை ரோடு, புல்லாலக்கோட்டை ரோடு, ராமமூர்த்தி ரோடு என அனைத்து ரோடுகளும் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக புதிதாக அமைக்கப்படவில்லை. அதனால் அனைத்து ரோடுகளும் குண்டும், குழிகளாக காணப்படுகின்றன. இதனால் தினசரி சாலைகளில் உள்ள குழிகளில் விழுந்து ஏராளமானோர் காயமடைகின்றனர்.

விருதுநகர் சாலைகளில் மல்லாங்கிணர் ரோட்டில் விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை முதல் பாண்டியன் நகர் வரையிலான 850 மீ தூரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையில் அரசு தலைமை மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி, இ.எஸ்.ஐ மருத்துவமனை, நர்சிங் பள்ளி, தலைமை அஞ்சல் நிலையம் உள்ளது. மேலும் இந்த சாலை வழியாக விருதுநகர் நகராட்சி பகுதி மற்றும் ரோசல்பட்டி ஊராட்சியில் வசிக்கும் 40 ஆயிரம் மக்கள் தினசரி சென்று வருகின்றனர்.

மல்லாங்கிணர் ரோட்டில் உள்ள 3 தனியார் மெட்ரிக் பள்ளிகள், காரியாபட்டியில் உள்ள பொறியியல் கல்லூரி, மல்லாங்கிணர், கல்குறிச்சி, காரியாபட்டி, தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்லும் கன்டெய்னர் லாரிகள் என 50 ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை முழுவதும் குளம் வெட்டியது போல காட்சி தருகிறது.  

இந்தசாலையை ஒட்டுமொத்த பேக்கேஜ் எடுத்த எஸ்பிகே நிறுவனம் போடுவதற்காக கடந்த ஒரு மாதம் வேலை துவக்கிய நிலையில், கழிவுநீர் வாறுகால் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. வாறுகால் கட்டிய பிறகே சாலையை போட முடியும் என்ற நிலையில் வேலையில் வேகம் இன்மையால் நேற்று முன்தினம் மாலை தலைமை அஞ்சலகம் முன்பாக கல்குறிச்சியை சேர்ந்த விஜயகுமார்(22) என்ற வாலிபர் டூவீலரில் சென்ற போது பள்ளத்தில் ஏறி இறங்கும் போது பின்னால் வந்த லாரி ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மல்லாங்கிணர் ரோட்டில் மிகவும் மோசமான நிலையில் உள்ள 850 மீ தூரத்தை விரைவாக போட வேண்டுமென ரோசல்பட்டி ஊராட்சி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: