நீர்நிலைகள் சீரமைப்பின்போது பாதைகளை குதறிய அதிகாரிகள் விவசாயிகள் கடும் அதிருப்தி

கம்பம், செப்.7: நீர்நிலைகள் சீரமைப்பு பணியின்போது, விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதைகளை பொதுப்பணித்துறையினர் குதறி போட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். இதனால் விவசாய சங்கம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கோடைகாலத்தில் ஆறு மற்றும் குளங்களில் தண்ணீர் வருவது குறைவாக இருக்கும். இந்த கால கட்டத்தில் பராமரிப்பு மற்றும் பலப்படுத்தும் பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு ரூ.6 கோடி செலவில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள கண்மாய், குளங்கள் தடுப்பணைகள் மற்றும் வாய்க்கால்களின், கரைகளை அகலம் மற்றும் பலப்படுத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள தடுப்பணைகள், வாய்க்கால்களின் பலம், கண்மாய் குளங்களின் கரைகளை அகலப்படுத்துதல், பராமரித்தல், உயர்த்துதல் பணிகளும் நடைபெற்றது. குளங்களின் கரைகளை பலப்படுத்தும் போது, விவசாய பணிகளுக்காக கொண்டு செல்லப்படும் வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வரும் அளவில் 20 அடி அகலத்திற்கு சாலை அமைக்கப்படும்; சாலையின் மேல் பகுதியில் மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்படாமலிருக்க, தரை இறுகவும் பலம்பெறவும், மழைக்காலங்களில் விவசாய நிலங்களுக்கு வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படாத வகையில் செம்மண் போட்டு தரைக்கு இறுக்கம் கொடுக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

தொடங்கிய இரு மாதங்களிலேயே கம்பம் பகுதியில் வீரப்ப நாயக்கன்குளம், ஒட்டுக்குளம், சின்னவாய்க்கால், ஒடப்படி குளம் ஆகியவற்றின் கரை உயர்த்தும் பணிகள் முடிவடைந்தது. ஆனால் கரையை பலப்படுத்தவும், உயரப்படுத்தவும், குளங்களில் தூர்வாரிய மண் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. செம்மண் கிராவல் போட்டு தரை பலப்படுத்தவில்லை. இதனால் மழைக்காலம் வந்ததும் கரைப்பாதை முழுவதும் மண் அரிப்பு ஏற்பட்டு, சகதிக்கடாகிவிட்டது. விளைநிலத்திற்கு விவசாயிகளின் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கரைபாதையில் செம்மண் கிராவல் அடித்து பாதையை சமப்படுத்தவும், பலப்படுத்தவும் விவசாயிகள் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் பொதுப்பணித்துறையினர் இதை கண்டு கொள்ளவில்லை.

தற்போது முதல்போக நெல் சாகுபடி நடந்து வருவதால், வீரப்பநாயக்கன்குளம், ஒட்டக்குளம், சின்னவாய்க்கால், ஒடப்படி குளம் பகுதியிலுள்ள வயல்களுக்கு உரம் மற்றும் விவசாய பொருட்கள் இந்த கரை வழியாக கொண்டு செல்ல வேண்டி உள்ளது. ஆனால் கரைப்பகுதி மேடும் பள்ளமுமாக உள்ளதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக விவசாயிகள், தொழிலாளர்கள் செல்லும் வகையில் கரைபாதையில் செம்மண் கிராவல் அடித்து சீர்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராடுவோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுப்பணித்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: