ஓராண்டு முடிவதற்குள் சேதம் மழைநீர் கசியும் புதிய பள்ளி கட்டிடம் பணிகள் தரமில்லை கிராமமக்கள் குற்றச்சாட்டு

சின்னமனூர், செப்.7: சின்னமனூர் அருகே கட்டி முடித்து ஓராண்டு நிறைவடைவதற்குள் பள்ளி கட்டிடத்தில் மழைநீர் கசியும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணிகள் தரமின்றி நடந்ததாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சின்னமனூர் அருகே அப்பிபட்டி ஊராட்சியில் உள்ளது முத்துகிருஷ்ணாபுரம். இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள குழந்தைகளின் வசதிக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டது. தற்போது இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.

கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் உள்ளே படித்துக் கொண்டிருந்த மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பின்னர் பள்ளி கட்டிடங்கள் மூடப்பட்டன. வெளியில் தனியார் மாட்டுக்கொட்டகையில் பள்ளி இயங்கியது. இதனிடையே கடந்த 2016ம் ஆண்டு ரூ.12 லட்சம் மதிப்பில் நீண்ட வகுப்பறைகளுடன் பள்ளிக்கு புதிய கான்கிரீட் கட்டிடம் கட்டும் பணி துவங்கியது. 2017ல் பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து மாட்டுக்கொட்டகையில் இருந்து வகுப்புகள் காலி செய்யப்பட்டன. புதிய கட்டிடத்தில் மாணவர்கள் படிக்க தொடங்கினர். புதிய கட்டிடத்தில் கடந்த 11 மாதமாக பள்ளிக்கூடம் நடந்து வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் மழை பெய்தபோது, தண்ணீர் கான்கிரீட் மேற்கூரையில் இருந்து வகுப்பறைக்குள் கசிந்தது. இதனால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் கட்டிடத்தில் உள்ள தூண்கள் மற்றும் சுவர் பகுதிகளில் சிறு சிறு கீறல்கள் ஏற்பட்டுள்ளன. கட்டிடம் பலவீனமாக இருக்கிறது. எப்போது இடிந்து விழும் என தெரியவில்லை. இதுகுறித்து பள்ளியில் இருந்து சம்மந்தப்பட்ட துறைகளுக்கு புகார் அனுப்பியுள்ளனர். மக்கள் கூறுகையில், ‘‘ரூ.12 லட்சம் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடம் ஓராண்டு முடிந்ததுமே சேதமடைந்துவிட்டது. வகுப்பறைக்குள் மழைநீர் கசிகிறது. பலவீனமான தூண்கள் மாணவர்கள், ஆசிரியர்களை மிரட்டி வருகின்றன. இதனால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். கட்டிடம் சாதாரண மழைக்கே பலவீனம் அடைந்துவிட்டது. தொடர்மழை பெய்தால் தாக்குப்பிடிக்குமா என்பது சந்தேகம்தான். கட்டிடத்தை தரமில்லாமல் கட்டியுள்ளனர். மாணவர்களின் உயிருடன் இப்படி விளையாடலாமா?’’ என்றனர்.

Related Stories: