வீடுகள் சேதத்தால் முகாம்களிலேயே தஞ்சம் மழை ஓய்ந்தும் சோகம் ஓயவில்லை

மூணாறு, செப்.7: மூணாறில் மழை நின்ற பிறகும் மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பவில்லை. வீடுகள் சேதமடைந்துள்ளதால் மக்கள் முகாம்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்னர். அரசு நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மூணாறில் கடந்த மாதம் பெய்த மழையால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, க்ரம்ஸ்லண்டு எஸ்டேட் பகுதி 20 முறி லயனை சேர்ந்த கணேசன், ஆயிஷா, தாமஸ், சுருளி, சுசிலா ஆகியோரின் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. கனமழை எச்சரிக்கையால் இவர்கள் தங்கள் உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்ததால், உயிர்தப்பினர்.

தற்போது மழை நின்ற பிறகும் சொந்த வீட்டிற்கு திரும்ப முடியாமல் இந்த 5 குடும்பமும் பரிதவித்து வருகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இவர்கள் புதிய வீடு கட்டுவதற்கு மற்றும் இடிந்த வீட்டை சீரமைக்க முடியாத நிலையில் உள்ளனர். இன்னும் உறவினர்கள் வீடுகளிலேயே உள்ளனர். எனவே அரசு அறிவித்த நிவாரண உதவிகளை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இதே பகுதியில் மேலும் 20 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இவை எந்த நேரத்திலும் இடியும் நிலையில் உள்ளன. வீடுகளுக்கு செல்ல முடியாமல் பல குடும்பங்கள் முகாம்களில் தங்கியுள்ளனர்.

இவ்வாறு பரிதவிக்கும் குடும்பங்களுக்கு இதுவரை அரசு சார்பாக எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. பல முறை அதிகாரிகளிடம் தங்களின் நிலையை எடுத்து குறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அரசு நிவாரண உதவிகளை விரைந்து வழங்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.

Related Stories: