இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர் குடிமகன்கள் பஸ்ஸ்டாண்டில் ‘மட்டை’

கம்பம், செப்.7: கம்பம் பஸ் ஸ்டாண்டில் குடிமகன்கள் இருக்கைகள் முழுவதையும் ஆக்கிரமித்து படுத்துக்கொள்கின்றனர். இதனால் பயணிகள் கால்கடுக்க நிற்க வேண்டியுள்ளது. எனவே பஸ்ஸ்டாண்டில் குடிமகன்கள் தொல்லையை ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் முதல்நிலை நகராட்சியான கம்பம் நகராட்சி நிர்வாகம் சார்பாக பொதுமக்கள் நகராட்சிக்கு தானமாக வழங்கிய இடத்தில் கடந்த 2004ல் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாத்தலங்களான சுருளி அருவி, தேக்கடி செல்லும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் கம்பம் வந்து செல்கின்றனர். மேலும் அருகிலுள்ள கேரள பகுதியான கம்பம்மெட்டு, குமுளி, கட்டப்பனை பகுதியிலிருந்து நாள்தோறும் ஏராளமான கேரள மாநிலத்தவரும் இங்கு வந்து செல்கின்றனர்.

இதனால் கம்பம் பஸ்ஸ்டாண்டு பரபரப்பாக இருக்கும். ஆனால் இங்கு பகலில் குடிகாரர்களின் கும்மாளம், கூத்து, அடிதடி என்பது நாள்தோறும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. சிலர் பகல் நேரங்களில் மதுபாட்டில் வாங்கிவந்து, பஸ்ஸ்டாண்டில் பயணிகள் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஹாயாக குடித்துவிட்டு, போதை தலைக்கேறியதும் அரைகுறை ஆடையில் அலங்கோலமாய் அங்கேயே படுத்துவிடுகின்றனர். இதனால் புதுபஸ்ஸ்டாண்டுக்குள் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் சங்கடத்துடனேயே வந்து செல்கின்றனர். பயணிகள் இருக்கையை குடிகாரர்கள் ஆக்கிரமித்து கொள்வதால், பஸ்ஸ்டாண்டில் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணியும், உட்கார இடமில்லாமல் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

பஸ்ஸ்டாண்டில் போலீசார் அவ்வப்போது பணியிலிருந்தாலும் குடிகாரர்களை விரட்ட நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே கம்பம் பஸ்ஸ்டாண்டில் திரியும் குடிமகன்கள் தொல்லையிலிருந்து பயணிகளை பாதுகாக்க போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பயணிகள் கூறுகையில், ‘‘கம்பம் புது பஸ் ஸ்டாண்டில் குடிமகன்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. போதையை ஏற்றிவிட்டு பஸ் ஸ்டாண்ட் இருக்கையில் படுத்துக்கொள்கின்றனர். இதனால் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், முதியவர்கள் நீண்டநேரம் கால்கடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது. போலீசார் குடிமகன்களை கட்டுப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

Related Stories: