ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை - பொதுமக்கள் குற்றச்சாட்டு

செய்யாறு, செப்.7: செய்யாறு, வெம்பாக்கம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் காலாவதியான ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பிரம்மதேசம், வெம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை பொருட்கள் வாங்கும் பொதுமக்களிடம் உப்பு, டீ தூள், ரவை, மைதா, சோப்பு போன்றவற்றை கட்டாயம் வாங்கும்படி விற்பனையாளர்கள் வற்புறுத்தி வருகிறார்களாம். ஒவ்வொரு ரேஷன் கடையிலும் டீ தூள், ரவை, மைதா போன்றவற்றை விற்பனையாளர்கள் கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும் என மேலதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அவ்வாறு விற்பனை செய்யப்படும் மைதா, ரவை, டீ தூள்கள் ஆகியன காலாவதி ஆன பொருட்களாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கேட்டால், விற்பனையாளர்கள் அலட்சியமாக பதில் கூறுகிறார்களாம்.இதேபோல், கூட்டுறவு பல்பொருள் அங்காடியிலும் காலாவதி ஆன பொருட்களை விற்பதாக குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: