ஆண்டிபட்டி அருகே திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவு தொற்று நோய்கள் பரவும் அபாயம்

ஆண்டிபட்டி, செப்.6: ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு மலை பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுகளை கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும், தொற்று நோய் பரவுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு 900 படுக்கை வசதிகள் உள்ளன. 170க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 270க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளனர். இங்கு பொது நல பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, மகப்பேறு பிரிவு, ரத்தவங்கி, ஸ்கேன் சென்டர், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, ஆய்வகம் உள்ளன.

நாள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் தேனி, திண்டுக்கல் மாவட்டமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.மருத்துவமனையில் சேகரிக்கும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்காக வளாகத்தின் தெற்கு பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கு நிறைந்த பின்னர் அதனை மரிக்குண்டு பிரிவிலிருந்து அம்மச்சியாபுரம் செல்லும் சாலையில் உள்ள திறந்த காட்டு பகுதியில் கொட்டுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மாசு, தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள், விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

விவசாயி குபேந்திரன் கூறுகையில், ‘‘மருத்துவக் கல்லூரி மருத்துவ கழிவுகளை விவசாயம் செய்யும் தோட்டங்கள் அருகே கொட்டி வருகின்றனர். இதனால் புதுப்புது நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் இந்தக் கழிவுகள் மீது தண்ணீர் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருகிறது. இவ்வழியாக கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பலர் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர்’’ என்றார்.

சமூக ஆர்வலர் சரவணன் கூறுகையில், ‘‘அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கழிவுகளை ஊரணியில் கொட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் காற்று மாசு அடைதல், தொற்றுநோய் பரவும் சூழல் நிலவி வருகிறது. விவசாயம் கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது. இப்பகுதியில் மருத்துவக் கழிவுகளை கொட்டக் கூடாது என்று கடந்த சில ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் மருத்துவமனை கண்டுகொள்ளவில்லை’’ என்றனர்.

Related Stories: