ராஜபாளையத்தில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைக்க முயற்சி

ராஜபாளையம், செப். 6: ராஜபாளையத்தில் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை வரும் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை கொண்டாட விழா கமிட்டியினர் முடிவு செய்தனர். இதையொட்டி ராஜபாளையம் வடக்கு காவல்நிலையம் எதிரில் அமைத்த பந்தலில் வைக்க பிரமாண்ட விநாயகர் சிலையை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு டிராக்டரில் கொண்டு வந்தனர். ஆனால் முறையான அனுமதி பெறவில்லை என கூறி பந்தலில் சிலையை வைக்க போலீசார் அனுமதி தர மறுத்தனர்.

இது தொடர்பாக போலீசாருக்கும், விழா கமிட்டியினருக்குமிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாதநிலையில், அன்று அதிகாலையில் விநாயகர் சிலையை பறிமுதல் செய்த போலீசார் ராஜபாளையம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் முத்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ், பொறுப்பாளர்கள் வெங்கடேசன், முருகன், விக்னேஷ், பரணி, ராம்சிங், பாரத் உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிந்த எஸ்ஐ முத்துக்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: