கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு இடைக்கால உற்பத்தி ஊக்கத்தொகை : டன்னுக்கு ₹200 வழங்க ஒப்புதல்

திருவண்ணாமலை, செப்.6: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு, டன்னுக்கு ₹200 வீதம் இடைக்கால உற்பத்தி ஊக்கத்தொகை வழங்க கலெக்டர் தலைமையிலான மாவட்ட குழு கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.திருவண்ணாமலை கலெக்டரின் முகாம் அலுவலகத்தில், கரும்பு விவசாயிகளுக்கு இடைக்கால உற்பத்தி ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக மாவட்ட அளவிலான குழு கூட்டம் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது.அதில், டிஆர்ஓ ரத்தினசாமி, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் அனுஷா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் நந்தகுமார், வேளாண்மை இணை இயக்குநர் செல்வசேகர் மற்றும் அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக வழங்க வேண்டிய நிலுவைத்தொகை, போளூர் தனியார் சர்க்கரை ஆலை கடந்த 6 மாதங்களாக வழங்காமல் உள்ள கொள்முதல் தொகை போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அரசு அறிவித்துள்ள இடைக்கால உற்பத்தி ஊக்கத்தொகையை விவசாயிகளுக்கு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017-2018ம் ஆண்டு கரும்பு பதிவுசெய்து, சர்க்கரை ஆலைகளுக்கு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு, டன்னுக்கு ₹200 வீதம் இடைக்கால உற்பத்தி ஊக்கத்தொகை வழங்குவது என குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன் முதற்கட்டமாக, செய்யாறு, ஆம்பூர், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, கள்ளக்குறிச்சி-1 மற்றும் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 7,250 விவசாயிகள் விநியோகம் செய்த 3,59,389 மெட்ரிக் டன் கரும்புக்கு, இடைக்கால உற்பத்தி ஊக்கத்தொகை வழங்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தனியார் ஆலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கரும்புக்கான ஊக்கத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பாக, குழு கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பான, அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories: