தண்டராம்பட்டு அருகே வேளாண் கல்லூரியில் பாலியல் புகார் கூறிய மாணவிக்கு வகுப்பு நடத்த பேராசிரியை மறுப்பு மாணவர்களும் வகுப்பை விட்டு வெளியேறியதால் பரபரப்பு

தண்டராம்பட்டு, செப்.5: தண்டராம்பட்டு அருகே வேளாண் கல்லூரியில் உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த மாணவிக்கு பேராசிரியை பாடம் நடத்த மறுத்துள்ளார். அதோடு மாணவர்களும் வகுப்பை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரியில் படிக்கும் சென்னையை சேர்ந்த 21 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவுப்படி பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் சாந்தி தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணை குழுவினர் நேற்று முன்தினம் வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரியில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடத்தினர். அப்போது மாணவி பல்வேறு ஆதாரங்களை விசாரணை குழுவிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், விசாரணை குழுவினர் என்னிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆதாரங்களை கொடுத்தேன். மேலும் ரகசிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. ெதாடர் விசாரணையின்போது அவற்றை வழங்குவேன் என்றார்.இந்நிலையில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி நேற்று காலை 7.30 மணிக்கு வழக்கம்போல் வகுப்புக்கு வந்தார். அப்போது வகுப்புக்கு வந்த பேராசிரியை, மாணவியை பார்த்தவுடன் பாடம் நடத்தாமல் வகுப்பைவிட்டு வெளியேறினார். இதனால் வகுப்பில் இருந்த 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் வகுப்பை விட்டு வெளியேறி பேராசிரியையுடன் சென்றனர்.இதுகுறித்து மாணவி, கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவித்தார். அண்ணாமலை மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து, பாடம் எடுக்க மறுத்த பேராசிரியைக்கு எதிராக மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த வானாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வகுப்பு நடத்த பேராசிரியை பாடம் நடத்த சம்மதித்ததால், மறியல் முயற்சியை கைவிட்டனர். இதைதொடர்ந்து மாணவ, மாணவிகள் வகுப்புக்கு சென்றனர். தொடர்ந்து வழக்கம்போல் வகுப்புகள் நடந்தது.

Related Stories: